search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் சேகர்பாபு
    X
    அமைச்சர் சேகர்பாபு

    கோவில் நிலங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்- அமைச்சர் சேகர்பாபு

    திருக்கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்கள் பற்றிய விபரமும் சேகரிக்கப்படுகிறது.
    சென்னை:

    தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பு, கோவில் சொத்துகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது ஆலோசனையின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது.

    எந்தெந்த கோவில்களுக்கு எவ்வளவு நிலங்கள் உள்ளன, அதில் தற்போது கோவில் கட்டுப்பாட்டில் இருப்பது எவ்வளவு? ஆக்கிரமிப்பில் இருப்பது எவ்வளவு? என்பது பற்றி கணக்கெடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டதும் அனைத்து ஆக்கிரமிப்பு நிலங்களும் மீட்கப்படும். குத்தகை, வாடகை பாக்கிகள் வசூலிக்கப்படும் விபரங்கள், நிலுவையில் உள்ள பாக்கிகளை வசூலிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    திருக்கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு கும்பாபிஷேகம் நடத்தப்படாத கோவில்கள் பற்றிய விபரமும் சேகரிக்கப்படுகிறது.

    முக ஸ்டாலின்

    இந்த பணிகள் நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் பார்வைக்கு கொண்டு சென்று கும்பாபிஷேகங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

    அதே போல் சிதிலமடைந்த தேர்களும் கணக்கெடுக்கப்படுகிறது. கோவில்களுக்கு சொந்தமான திருக்குளங்கள், தற்போதைய அதன் நிலைகள், குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது.

    அறநிலையத்துறையில் கோவில்களுக்கு சொந்தமான 30 யானைகள் உள்ளன. இந்த யானைகளுக்கு மாதம் 2 முறை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    அர்ச்சகர் இல்லாத அனைத்து கோவில்களுக்கும் அர்ச்சகர்கள் மற்றும் காவலாளிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.





    Next Story
    ×