search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செஞ்சேரிமலை சாலை அபாய வளைவு அகற்றும் திட்டம்-நிதி ஒதுக்கீடு செய்ய கிராமமக்கள் கோரிக்கை

    உடுமலை மற்றும் கோவையில் இருந்து இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    உடுமலை:

    உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி வழியாக செஞ்சேரிமலை செல்லும் சாலை மாவட்ட முக்கிய சாலைகள் பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.உடுமலை, மடத்துக்குளம்  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு செல்லும் வாகனங்களுக்கு மாற்று வழியாகவும் இந்த சாலை உள்ளது.

    செஞ்சேரிமலையில் இருந்து பூரண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சென்று  திருச்சி-கோவை சாலையில் இந்த சாலை இணைகிறது. உடுமலை மற்றும் கோவையில் இருந்து இந்த சாலையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    காற்றாலை மற்றும் நூற்பாலைகள் வழித்தடத்தில் இருப்பதால் உதிரி பாகங்கள் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் அதிகளவு செஞ்சேரிமலை சாலையில்  செல்கின்றன. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சாலை பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. சாலையில் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் இருவழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டது.

    ஏரிப்பாளையம் முதல் பச்சாக்கவுண்டன்பாளையம் வரை சாலையில் உள்ள பல்வேறு அபாய வளைவுகளை அகற்றவும், வளைவுகளை நேர்படுத்தும் வகையில்  அருகிலுள்ள நெடுஞ்சாலைத்துறை இடங்களில்மண் கொட்டி சமப்படுத்தி  வளைவுகளை நேராக்கவும் ரூ.20 கோடி வரை நிதி ஒதுக்கீடு அளிக்க , சில ஆண்டுகளுக்கு முன் அரசுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டது.

    இத்திட்டத்தை செயல்படுத்த  மக்கள் பிரதிநிதிகள் தரப்பிலும், சிறப்புத்திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கும் மனு அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விரைவில் செஞ்சேரிமலை சாலையில் அபாய வளைவுகளை மேம்படுத்த அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பல கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    Next Story
    ×