search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தீ பிடித்தது - வாலிபர் பலி

    ராசிபுரம் அருகே அதிகாலையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில் லாரி மற்றும் மோட்டார் சைக்கிளில் தீ பிடித்தது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற பேக்கரி கடைக்காரரின் மகன் பலியானார்.

    ராசிபுரம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 32). லாரி டிரைவர். இவர் தஞ்சாவூரை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் லாரியில் பட்டுக்கோட்டை அடுத்த பேராவூரணியில் நேற்று மாலை கயிறு லோடு ஏற்றினார். பின்னர் இரவு 8 மணி அளவில் அங்கிருந்து சேலத்திற்கு லாரி புறப்பட்டது. இன்று அதிகாலை 5 மணிஅளவில் சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர் கேட் மேம்பாலத்தில் லாரி சென்றது.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற வாலிபர் சிலம்பரசன் (21) என்பவர், லாரி முன்சக்கரத்தின் அடியில் சிக்கி சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் மோட்டார் சைக்கிள் மற்றும் லாரியில் தீப்பிடித்தது. மேலும் லாரியில் இருந்த கயிறு லோடில் தீ மளமளவென பரவியதோடு, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் மீதும் தீப்பற்றி எரிந்தது.

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் சிலம்பரசன் (21) சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தீயில் கருகி இறந்தார். தகவல் அறிந்த ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    லாரியில் இருந்த கயிறு கட்டுக்களை கீழே தள்ளிவிட்டு தீயை அணைத்தனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் வந்தது. இதனிடையே இறந்த சிலம்பரசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற சிலம்பரசன் மதுரை அருகே உள்ள கொடைரோடு பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் இவரது தந்தை ரவி திருப்பத்தூரில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருவதும் தெரிந்தது. கடைக்கு செல்வதற்காக கொடை ரோட்டில் இருந்து புறப்பட்டு சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக திருப்பத்தூர் சென்றபோது விபத்தில் சிக்கியது கண்டுபிடிக்கப்பட்டது.


    Next Story
    ×