search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    உடுமலை பகுதியில் கழிவுநீர் கலப்பதால் மாசுபடும் குளங்கள்

    கால்வாய் கரையில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் குப்பைக்கழிவுகளும் பாசன கால்வாயில் நேரடியாக கலந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
    உடுமலை :

    உடுமலையில் 7 குளம் பாசனம் மற்றும் பி.ஏ.பி., தளி கால்வாய், உடுமலை கால்வாய், பிரதானக்கால்வாய் என பாசன கட்டமைப்புகள் உள்ளன. கிராமங்களுக்கு குடிநீர், நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாகவும் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் உள்ளன. 7 குளங்களில் கரையோரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படும்  சாக்கடைக்கழிவுகள் நேரடியாக கலந்து குளத்து நீரை மாசுபடுத்துகிறது.

    அதே போல் தளி கால்வாய், உடுமலை கால்வாயின் வழியோரத்திலுள்ள தளி பேரூராட்சி, பள்ளபாளையம், ஜல்லிபட்டி, போடிபட்டி, கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனூர், பெரியகோட்டை உள்ளிட்ட பெரும்பாலான ஊராட்சிகளில் குடியிருப்புகளில் இருந்து நேரடியாக கழிவு நீர் கால்வாயில் கலக்கிறது.

    மேலும் கால்வாய் கரையில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளதால் குப்பைக்கழிவுகளும் பாசன கால்வாயில் நேரடியாக கலந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.எனவே நீர் நிலைகளை மாசுபடுத்தும் வகையில் அமைந்துள்ள இக்கட்டமைப்புகளை அகற்றவும், சாக்கடைக்கழிவுகள் நேரடியாக கலப்பதை தடுக்கும் வகையில் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளனர்.

    மேலும் தளி பேரூராட்சி பகுதி கழிவுகள், குப்பை மற்றும் சாக்கடைக்கழிவுகள் மற்றும் வழியோர குடியிருப்புகளின் கழிவுகளும் தளி கால்வாயில் நேரடியாக கலக்கிறது. இக்கால்வாய் வழியாக7 குளங்களுக்கு நீர் செல்வதால் கடும் பாதிப்பு ஏற்படுகிறது.வாய்க்காலில் அதிகளவு சேறும், சகதியும் படிந்து துர்நாற்றம், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பாசனநீருடன் கழிவநீரும் கலந்து குளங்களில் தேங்குவது மற்றும் விவசாயம், குடிநீருக்கும் பயன்படுத்தும் போது மக்களும் பாதிக்கின்றனர்.

    எனவே தளி கால்வாய் மற்றும் 7 குளங்கள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் குப்பை, கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். ஏற்கனவே 2020ம் ஆண்டு கடிதம் வழங்கியும் நடவடிக்கை எடுக்கவில்லை.உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தளி கால்வாய் உதவி பொறியாளர் செந்தில்குமார் தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதே போல் ஜல்லிபட்டி ஊராட்சி கழிவு நீர் மற்றும் குப்பை, இறைச்சிக்கழிவுகள், தென்பூதிநத்தம், அம்மாபட்டி குளத்தில் நேரடியாக கலக்கப்படுகிறது. போடிபட்டி ஊராட்சி மற்றும் குடியிருப்புகளில் இருந்து ஒட்டுக்குளத்தில் சாக்கடைக்கழிவுகள் கலப்பதோடு  குப்பை, கழிவுகள் கொட்டப்படுகிறது.பள்ளபாளையம் ஊராட்சி பகுதியில் இருந்து  செங்குளத்தில் இதே போல்  கழிவுகள் கலக்கிறது.

    இவ்வாறு குளங்கள் மற்றும் கால்வாய்களில் நேரடியாக கலக்கும் சாக்கடைக்கழிவுகள், குப்பை, இறைச்சி, கட்டடக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடிதம் வாயிலாக பொதுப்பணித்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    பாசன, நிலத்தடி நீர் மட்டம் மற்றும் குடிநீர் ஆதாரமாக உள்ள நீர் நிலைகளை காக்க உரிய நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளும், அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள்   வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×