search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைதான 4 பேரை படத்தில் காணலாம்.
    X
    திருச்செந்தூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சா மூட்டைகளுடன் கைதான 4 பேரை படத்தில் காணலாம்.

    ஆந்திராவிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் கடத்திய 110 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

    ஆந்திராவிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 110 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்துபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலாஜி தலைமையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் மற்றும் போலீசார் நேற்று காலையில் திருச்செந்தூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அடைக்கலாபுரம் பெட்ரோல் பங்க் பின்புறம் சந்தேகத்திற்கிடமாக 2 காரில் இருந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரளா மாநிலம் கோழிகோட்டை சேர்ந்த ஜாக்கிஸ்டன் மகன் அஸ்வின் (வயது 24), எர்ணாகுளம் முஸ்தபா மகன் அசீர் (22), கண்ணூர் மாவட்டம் தளச்சேரி அப்துல்லத்தீப் மகன் சாம்னாஜ் (22), ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த டத்துபாபு மகன் சாய்கணேஷ் (23) என்பது தெரியவந்தது. கார்களில் சோதனை நடத்தியபோது, மூட்டைகளில் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.

    மேலும், இவர்கள் 2 கார்களில் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 110 கிலோ கஞ்சாவை கடத்தி வந்து திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஏஜெண்டு மூலம் விற்பனை செய்வது தெரியவந்தது. இவர்கள் ஆந்திரா மாநிலத்திலிருந்து வருவதற்கு பயன்படுத்திய 2 கார்களையும், 110 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமார் கூறுகையில்,‘ தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக நடந்தது வருகிறது. இந்நிலையில் திருச்செந்தூர் அருகே அடைக்கலாபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக காரில் வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினோம். இவர்கள் 110 கிலோ கஞ்சாவை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து திருச்செந்தூர் பகுதிக்கு விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இங்கு ஒருவர் மூலம் விற்பனை செய்வது தெரியவந்தது. அவரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு 189 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 214 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கஞ்சா கடத்தியது தொடர்பாக 8 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கூறினார்.

    Next Story
    ×