search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அட்டை பெட்டியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி.
    X
    அட்டை பெட்டியில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்த காட்சி.

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீ விபத்து

    ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகள் பிரிவு என தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலை அடுத்த ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. ஆஸ்பத்திரியில் உள்ள கூடுதல் கட்டிடத்தில் கொரோனா வார்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகள் பிரிவு என தனித்தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் 23 நோயாளிகள் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர்.

    55 பேர் நோயாளிகள் பிரிவில் சிகிச்சையில் இருந்தனர். நேற்றிரவு திடீரென கொரோனா வார்டு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் நோயாளிகள் அவதிக்கு ஆளானார்கள். கொரோனா நோயாளிகள் கட்டிடத்தின் பின் பகுதியில் கிடந்த அட்டை பெட்டிகள் கொளுந்து விட்டு எரிவதை பார்த்த நோயாளிகள் அலறியடித்தபடி வார்டை விட்டு வெளியே ஓடினர்.

    தீ விபத்து குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் அங்கு கிடந்த அட்டை பெட்டிகள் முழுவதும் எரிந்து சாம்பலானது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கலெக்டர் அரவிந்த் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றார். தீ விபத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து கேட்டறிந்தார். தீ விபத்து குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளின் அட்டை பெட்டிகள் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்ற வார்டின் பின்பகுதியில் போடப்பட்டிருந்தது. இந்த அட்டை பெட்டிகளில்தான் முதலில் தீப்பிடித்துள்ளது.

    அட்டை பெட்டிக்கு யாராவது தீ வைத்தார்களா? புகைப்பிடித்தவர்கள் சிகரெட் துண்டுகளை வீசிச் சென்றதில் தீ விபத்து ஏற்பட்டதா? மின் கசிவு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தீ விபத்து காரணமாக கொரோனா வார்டு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் நோயாளிகள் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர். இதையடுத்து டாக்டர் குழுவினர் நோயாளிகளை வேறு கட்டிடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து நேற்றிரவே கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 78 நோயாளிகளும் முதலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டனர்.

    ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்ற நோயாளிகள் தனி அறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற நோயாளிகள் மற்றொரு அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர் குழுவினர் நோயாளிகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். 

    Next Story
    ×