search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் தூய்மைப்பணி நடைபெற்ற காட்சி.
    X
    திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் தூய்மைப்பணி நடைபெற்ற காட்சி.

    பக்தர்கள் தரிசனத்திற்கு தயாரான கோவில்கள்

    கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    கொரோனா ஊரடங்கு தளர்வில்  திருப்பூர் மாவட்டத்தில் நாளை முதல் பஸ்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட உள்ளது. 

    இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பணிமனைகளிலும் பஸ்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நகர பஸ்கள் 150, பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் 180 என மொத்தம் 330 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருப்பூர் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் என்பதால் தமிழகத்தின் தென்மாவட்டங்களான மதுரை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை அழைத்து வர பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. இதையடுத்து டாஸ்மாக் கடைகளில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அரவிந்த், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலும், தொற்று பரவலுக்கு இடமளிக்காத வகையிலும் டாஸ்மாக் கடை ஊழியர்களும், மதுபிரியர்களும் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து கட்டாயம் முககவசம் அணிந்து பக்தர்கள் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நுழைவு வாசலில் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்து பக்தர்கள் உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
    Next Story
    ×