search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வெளிமாவட்ட மதுப்பிரியர்கள் படையெடுப்பு எதிரொலி: திண்டுக்கல்லில் ஒரே நாளில் ரூ.6¾ கோடிக்கு மது விற்பனை

    வெளிமாவட்ட மதுப்பிரியர்கள் படையெடுப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.6¾ கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது.
    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதன்பின்னர் கொரோனா பரவல் குறைந்ததால் அனைத்து விதமான கடைகளும் படிப்படியாக திறக்கப்பட்டன. மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளை பொறுத்தவரை கடந்த மாதம் 14-ந்தேதி முதல் செயல்படுகின்றன.

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 156 மதுக்கடைகள் உள்ளன. இந்த மதுக்கடைகளில் ஊரடங்குக்கு முன்பு வரை தினமும் சராசரியாக ரூ.4 கோடிக்கு மதுபானம் விற்பனை ஆனது. ஆனால் ஊரடங்குக்கு பின்னர் கடந்த 14-ந்தேதி மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது ரூ.5 கோடிக்கு மதுபானம் விற்றது. இதற்கிடையே திண்டுக்கல்லையொட்டிய அண்டை மாவட்டங்களான திருப்பூர், கரூர், ஈரோடு ஆகியவற்றில் மதுக்கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை.

    இதனால் அந்த மாவட்டங்களை சேர்ந்த மதுப்பிரியர்கள் திண்டுக்கல் மாவட்டத்துக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபான விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது. அதிலும் பழனி, ஒட்டன்சத்திரம், குஜிலியம்பாறை, வேடசந்தூர் பகுதிகளில் அமைந்துள்ள 70 மதுக்கடைகளிலும் வெளிமாவட்ட மதுப்பிரியர்கள் குவிந்து விடுகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தின் மொத்த மதுபான விற்பனை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

    தினமும் சராசரியாக ரூ.6 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் நேற்று முன்தினம் அதிகபட்சமாக ரூ.6 கோடியே 73 லட்சத்துக்கு மதுபானம் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அண்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை திறந்து விட்டால் திண்டுக்கல்லில் மதுபான விற்பனை குறைந்து விடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    Next Story
    ×