search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரையில் தடுப்பூசி மையத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டம்

    மதுரை மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வரும் நிலையில் இதுவரை 5 லட்சத்து 68 ஆயிரத்து 927 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 9201 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மதுரையின் பிரதான தடுப்பூசி மையமாக செயல்படும் அரசு மருத்துவமனை தடுப்பூசி மையத்தில் இன்று தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னறிவிப்பு எதுவும் இல்லாத நிலையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான டோக்கன் பெறுவதற்காக அதிகாலை 4 மணி முதல் 200-க்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    பல மணி நேரம் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனால் வரிசையில் நின்றிருந்த மக்கள் ஆத்திரமடைந்தனர்.

    கோரிப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். முன் அறிவிப்பு இல்லாததால் பல கிலோ மீட்டர் தூரத்திலிருந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்று காத்திருந்தவர்களுக்கு நாளைக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    மதுரை மாவட்டத்தில் இன்று 4410 தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ள நிலையில் 15 மையங்களில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×