search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்டுபன்றிகளால் சேதமான மக்காச்சோள பயிர்கள்.
    X
    காட்டுபன்றிகளால் சேதமான மக்காச்சோள பயிர்கள்.

    மக்காச்சோள பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றிகள்-விவசாயிகள் கவலை

    மக்காச்சோளம் நல்ல முறையில் வளர்ந்து வந்ததுடன் பயிர்களில் கதிர்கள் பிடித்து முற்றி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் தளி, அமராவதி சுற்றுவட்டார பகுதியில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்குள்ள விவசாயிகள் திருமூர்த்தி, அமராவதி அணை, கிணறு, ஆழ்குழாய் கிணறு, வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை ஆதாரமாக கொண்டு சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிணற்றுப்பாசனத்தை ஆதாரமாக கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது.

    3 மாதம் தீவிர பராமரிப்புக்கு பின்பு பயிர்கள் தற்போது அறுவடை நிலையில் உள்ளது. இந்த நிலையில் கல்லாபுரம் அருகே செல்வபுரம் பகுதியில் முகாமிட்டுள்ள காட்டுப்பன்றிகள் கடந்த சில நாட்களாக மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள நீர் இருப்பு, நீர்வரத்தை ஆதாரமாகக்கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்தோம். அதைத்தொடர்ந்து 3 மாதங்களாக பயிர்களை தீவிரமாக பராமரித்து வந்தோம். இதனால் அவை நல்ல முறையில் வளர்ந்து வந்ததுடன் பயிர்களில் கதிர்கள் பிடித்து முற்றி அறுவடை தருவாயில் உள்ளது. 

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூட்டம் கூட்டமாக வருகின்ற காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. 

    எனவே கல்லாபுரம் பகுதியில் மக்காச்சோள பயிர்களை நாசம் செய்து வருகின்ற காட்டுப்பன்றிகளை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×