search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    முழு ஊரடங்கில் 3-வது கட்ட தளர்வு: மேலும் 2 லட்சம் கடைகள் நாளை திறப்பு

    பள்ளி-கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளும் நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது.

    சென்னை:

    கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25-ந்தேதி முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது.

    இந்த ஊரடங்கு இந்த மாதம் 30-ந்தேதி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஏற்கனவே மளிகை கடைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் முதலில் திறக்கப்பட்டன. அதன்பிறகு மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது.

    இப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நோய் தொற்று வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு நாளை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சலூன் கடை (கோப்புப்படம்)

    அதன்படி அழகு நிலையங்கள், சலூன் கடைகள், ஏசி வசதி இல்லாமல் 50 சதவீத வாடிக்கையாளர்கள் வந்து செல்லும் வகையில் அனுமதிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த கடைகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

    மிக்சி, கிரைண்டர், டிவி, பிரிட்ஜ் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் நாளை முதல் திறக்கப்படுகிறது.

    இதேபோல் மிக்சி கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின்பொருட்கள் பழுது நீக்கும் கடைகளும் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கூடுதல் கடைகள் திறக்கப்பட உள்ளன.

    கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்கப்படுகிறது. மண்பாண்டம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பது மற்றும் விற்பனை செய்யவும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    பள்ளி-கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிர்வாக பணிகளும் நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கார்களில் வேலைக்கு செல்ல ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இருசக்கர வாகனங்களிலும் நாளை முதல் பணிக்கு செல்லலாம். இ-பதிவு மற்றும் கம்பெனிகள் வழங்கி உள்ள அடையாள அட்டையை போலீஸ் கேட்கும் போது காண்பிக்கவேண்டும்.

    இதையும் படியுங்கள்... ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

    ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 20 சதவீதம் பேர் நாளை முதல் வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதே போல் வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் அரசு பூங்காக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள், விளையாட்டு திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை நடை பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    இதேபோல் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று மற்ற மாவட்டங்களை காட்டிலும் மெதுவாக குறைந்து வருவதால் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளுடன் கூடுதல் சலுகைகளும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.

    அதன்படி தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படுகிறது.

    பிளம்பர், எலக்ட்ரீசியன், கார்பெண்டர் ஆகியோர்களும் இ-பதிவுடன் வீடுகளுக்கு சென்று மாலை 5 மணிவரை பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது. வாடகை கார்கள், ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் பயணம் செய்யலாம்.

    வேளாண் உபகரணங்கள், பம்புசெட்டு பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகளும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட நாளை முதல் அனுமதிக்கப்படுகிறது.

    கூடுதல் தளர்வுகள் அனுமதிக்கப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு சகஜ நிலைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×