search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடுமலை பகுதியில் தேக்கமடைந்துள்ள சின்ன வெங்காயம்.
    X
    உடுமலை பகுதியில் தேக்கமடைந்துள்ள சின்ன வெங்காயம்.

    திருப்பூர் மாவட்டத்தில் 800 டன் சின்ன வெங்காயம் தேக்கம்

    திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் ஏக்கர் பரப்பில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், குண்டடம், பொங்கலூர், குடிமங்கலம், மூலனூர், வெள்ளகோவில், காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு அறுவடை முடிந்து 60 நாட்களாகியும் உரிய விலை கிடைக்காததால் வெங்காயத்தை விற்க முடியாமல் விவசாயிகள் பலரும் அவதிக்குள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் மாவட்டம் உகாயனூர் பகுதியை சேர்ந்த சின்ன வெங்காயம் பயிரிட்ட  விவசாயி ஒருவர் கூறியதாவது:-

    பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் 15டன் விதைக்கான வெங்காயம் உற்பத்தியானது. ஒரு ஏக்கருக்கு ரூ.2லட்சம் வரை செலவானது. கொரோனா ஊரடங்குக்கு முன் கிலோ ரூ.55 வரை கொள்முதல்  செய்யப்பட்டது.

    தற்போது கேட்பாறின்றி உள்ளது. இருப்பு வைத்து விற்பதால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர்க்கடன், நகைக்கடன், உரக்கடன் என பல்வேறு இன்னல்களுக்கு நடுவே அறுவடை செய்தும் சின்ன வெங்காயத்தை விற்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது என்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் வெங்காயத்தை விற்க முடியாமல் பட்டறையில் அடைத்து பாதுகாத்து வருகின்றனர்.

    மொத்த வியாபாரி ஒருவர் கூறும்போது, விலை குறைவுக்கு கொரோனா ஊரடங்கும் ஒரு காரணம். விவசாயிகளுக்கு பெருத்த இழப்புதான். திண்டுக்கல் சந்தையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5000 மூட்டைகள் விற்பனையாகும். ஆனால் தற்போது 1000 மூட்டைகள் மட்டுமே விற்பனையாகிறது. பணப்புழக்கமும் குறைந்துள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் என அனைவருக்குமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது  என்றார். 

    தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 2ஆயிரம் ஏக்கர் பரப்பில் சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரிகள் கொள்முதல் செய்வதிலும் சிக்கல் நிலவுகிறது. இருப்பு வைத்து விற்க முடியாத சோகமும் உள்ளது. தற்போதைய சூழலில் சுமார் 500 முதல் 800 டன் இருப்பு உள்ளது. இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
    Next Story
    ×