search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    முத்தாரம்மன் கோவிலில் 4வது முறையாக கொள்ளை- தங்க நகைகள் தப்பியது

    கொள்ளை சம்பவங்களில் ஒரே கொள்ளையர்கள்தான் தொடர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வைத்தியநாதபுரத்தில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பூசாரி மட்டும் தினசரி பூஜைகளை செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் பூஜைகள் முடித்து விட்டு கோவிலை பூட்டி சென்றார்.

    இன்று காலை பூஜை செய்வதற்காக பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. கோவில் கருவறையின் கதவுகள் உடைக்க முயற்சிக்கப்பட்டிருந்தது.

    சாமிக்கான தங்க நகைகள் வைக்கப்பட்டிருந்த அறையையும் மர்மநபர்கள் உடைத்திருந்தனர். ஆனால் நகைகள் திருட்டு போகவில்லை. இது குறித்து கோவில் பூசாரி, நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கோவிலுக்கு வந்தனர்.

    கோவில் உடைக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    கோவிலில் 12 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அந்த கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் கொள்ளையர் மின் இணைப்பை துண்டித்து விட்டு கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள் ளனர்.

    வைத்தியநாதபுரம் முத்தாரம்மன் கோவிலில் ஏற்கனவே 3 முறை கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. 4-வது முறையாகவும் கொள்ளையர்கள் நேற்றிரவு கைவரிசை காட்டி உள்ளனர்.

    இந்த கொள்ளை சம்பவங்களில் ஒரே கொள்ளையர்கள்தான் தொடர்ந்து ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கோவிலில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×