search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை-கலெக்டர் எச்சரிக்கை

    திருப்பூர் மாவட்டத்தில் நடமாடும் வாகனம் மூலம் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் அறிவித்துள்ளார்.
    திருப்பூர்:

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது.இதையொட்டி பொதுமக்களுக்கு தடையின்றி காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைக்கும் வகையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை,தோட்டக்கலைத் துறை,வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, உள்ளாட்சி துறைகளான மாநகராட்சி, நகராட்சி மற்றும் மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் சில பகுதிகளில் காய்கறிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக கட்டுப்பாட்டு அறைக்கு புகார் பெறப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து அனைத்து காய்கறி விற்பனை வாகனங்களில் காய்கறிகளின் விலை பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் வகையில் முகப்பில் ஒட்டி வாகனத்தை இயக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திக்கேயன் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், தினமும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விலை பட்டியல் தயார் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. துறை அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் இயக்கப்படும் வாகனங்களில் விலைப்பட்டியல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றதா? என்பதை கண்காணிக்க வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் மாநகராட்சி துறை சார்பாக குழு அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    விலைப்பட்டியல் இல்லாமல் இயக்கப்படும் காய்கறி விற்பனை வாகனங்களின் அனுமதி உடனடியாக ரத்து செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் இதுகுறித்து புகார் தெரிவிக்க காய்கறி விற்பனை கட்டுப்பாட்டு அறைக்கு 0421 2971192 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.
    Next Story
    ×