search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் பஸ் ஏற்பாடுகள் தீவிரம்

    அரசு மருத்துவம னைகளில் பயன்படுத்தும் வகையில், கூடுதலாக 2 ஆக்சிஜன் பஸ்கள் திருப்பூரில் தயாராகி வருகின்றன.
    திருப்பூர்:

    திருப்பூர்மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்க தாமதம் ஏற்படுவதால் மூச்சுவிட சிரமப்படும் கொரோனா நோயாளிகள்  ஆம்புலன்சில் ஆக்சிஜன் பெற்றபடி காத்திருந்தனர். இந்த நிலையை போக்க, தன்னார்வ அமைப்பினர் ஆக்சிஜன்பஸ் வசதியை செய்து கொடுத்தனர்.

    பள்ளி பஸ் ஒன்றில் காற்றில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவியை வைத்து அதன்மூலம் 24 மணி நேரமும் 6 பேருக்கு ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. இதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளதாலும், மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்றும் கூடுதலாக இரண்டு ஆக்சிஜன் பஸ்கள் வடிவமைக்கும் பணி  போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது.

    இது குறித்து தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:-

    திருப்பூரில் ஆக்சிஜன் பஸ் வந்த பின் கொரோனா நோயாளிகளின் சிரமம் வெகுவாக குறைந்துள்ளது. திருப்பூரை பின்பற்றி கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஆக்சிஜன்பஸ் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
    மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி கூடுதல் ஆக்சிஜன் பஸ் வடிவமைத்து மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இரண்டாம் கட்டமாக  இரண்டு பஸ்கள் தயாராகி வருகின்றன. கலெக்டரின் அறிவுரைப்படி தேவைப்படும் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் பஸ்களை பயன்பாட்டுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

    மேலும் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பணிக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு அமைப்புகளும் தொழில்துறையினரும் பணியாற்றி வருகின்றனர். ஆக்சிஜன் பஸ், காத்திருப்பு மையம், ஆக்சிஜன் பிளாண்ட் போல கூடுதலாக ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் சிகிச்சை மையங்களை நிறுவ தொழில்துறையினர் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
    Next Story
    ×