search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரத்தினம்மாள்.
    X
    ரத்தினம்மாள்.

    தேனி அருகே அரசு கொடுத்த ரூ.2,000 பணத்தை முதல்வர் நிதிக்கு அனுப்பிய மூதாட்டி

    தேனி அருகே அரசு வழங்கிய கொரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பிய மூதாட்டியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    உத்தமபாளையம்:

    தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறது. அந்தந்த ரேசன் கடைகள் மூலம் கடந்த 15-ந் தேதி முதல் இந்த நிதி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை காரணமாகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    அவரது கோரிக்கையை ஏற்று பல்வேறு தரப்பினரும் நிவாரண நிதி அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சுக்காங்கால்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி ரத்தினம்மாள் (வயது 74) என்பவர் தங்களுக்கு அரசு கொடுத்த ரூ.2 ஆயிரம் பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பினார்.

    வயதான இந்த தம்பதிகள் தங்கள் பிள்ளைகள் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த நிலையிலும் தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை கொடுத்ததாக ரத்தினம்மாள் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பலரும் உதவி செய்து வருகின்றனர்.

    எங்களால் பண உதவி செய்ய இயலவில்லை என்றாலும் அரசு கொடுத்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தேன். அதன்படி நான் பணம் வாங்கிய கூட்டுறவு சங்கத்திலேயே அதன் செயலாளர் முருக ராஜனிடம் கொடுத்து அதனை அனுப்பி வைக்குமாறு தெரிவித்தேன் என்றார்.

    இதனையடுத்து அந்த பணம் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் தங்கள் சேமிப்பு பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து வரும் நிலையில் அரசு கொடுத்த பணத்தை நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    Next Story
    ×