search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    பெரிய நிலக்கரி கப்பலில் இருந்து ராட்சத கிரேன் மூலம் நிலக்கரி இறக்கப்படுவதை படத்தில் காணலாம்.
    X
    பெரிய நிலக்கரி கப்பலில் இருந்து ராட்சத கிரேன் மூலம் நிலக்கரி இறக்கப்படுவதை படத்தில் காணலாம்.

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் பெரிய நிலக்கரி கப்பலை கையாண்டு புதிய சாதனை

    தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அதிக சரக்குகளுடன் வந்த பெரிய நிலக்கரி கப்பலை கையாண்டு புதிய சாதனை படைத்தது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் பனமா கொடியுடன் எம்.வி. பஸ்டியன்ஸ் என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகம் வந்தது. இந்த கப்பல் 245 மீட்டர் நீளமும், 43 மீட்டர் அகலமும், 13.04 மீட்டர் மிதவை ஆழமும் கொண்டது. இந்தோனோஷியா நாட்டில் உள்ள முயரா பெராவ் என்ற துறைமுகத்தில் இருந்து 92 ஆயிரத்து 935 டன் நிலக்கரியை தமிழ்நாடு செய்திதாள் காகித நிறுவனத்திற்காக கொண்டுவந்து உள்ளது.

    துறைமுகத்தில் உள்ள சரக்குதளம் 9-ல் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் இந்த கப்பலில் உள்ள சரக்குகள் கையாளப்படுகிறது. இந்த கப்பலில் உள்ள மொத்த சரக்குகள் இறக்குமதி செய்யும் பணி இன்று முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு கடந்த 16.9.2019 அன்று சரக்கு தளம் 9-இல் 89 ஆயிரத்து 777 மெட்ரிக் டன் சரக்குகளுடன் கூடிய பெரிய கப்பலை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிதியாண்டு ஏப்ரல் வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நிலக்கரி இறக்குமதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. முந்தைய நிதியாண்டில் 11.05 லட்சம் டன் நிலக்கரி கையாளப்பட்டது. தற்போது இந்த நிதியாண்டின் ஏப்ரல் வரை 11.81 லட்சம் டன் நிலக்கரியை கையாண்டு இதற்கு முந்தைய நிதியாண்டில் கையாண்ட அளவை விட அதிகமாக 5 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. மேலும் வ.உ.சி. துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகள் இந்த நிதியாண்டு ஏப்ரல் வரை 42 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது.

    இந்த சாதனை படைக்க காரணமாக இருந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், பளுதூக்கி எந்திரம் இயக்குபவர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரையும் வ.உ.சி. துறைமுக பொறுப்புக் கழக தலைவர் ராமச்சந்திரன் பாராட்டினார்.
    Next Story
    ×