search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பெண்களும், டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்களும் திரண்டிருந்த காட்சி
    X
    ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க பெண்களும், டாஸ்மாக் கடையில் மது வாங்க குடிமகன்களும் திரண்டிருந்த காட்சி

    பாம்பனில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க குவிந்த பெண்கள்

    பாம்பனில் அத்தியாவசிய தேவைக்காக பொருட்கள் வாங்க ரேஷன் கடையில் பெண்கள் குவிந்தனர். டாஸ்மாக் கடையில் ஆண்கள் குவிந்தனர்.
    ராமேசுவரம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதையடுத்து வருகிற 20-ந் தேதி வரை புதிதாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் அரசின் உத்தரவை தொடர்ந்து ராமேசுவரம் பகுதியில் நேற்று டீக்கடை மற்றும் மளிகை கடை மட்டுமே வழக்கம்போல் திறக்கப்பட்டன. பகல் 12 மணிக்கு பிறகு அந்த கடைகளும் மூடப்பட்டன. மற்ற கடைகள் திறப்பதற்கு அரசு தடை விதித்ததை தொடர்ந்து நேற்று பகல் 12 மணியில் இருந்து ராமேசுவரம் முக்கிய சந்திப்பு சாலையான திட்டக்குடி சாலை, கடை தெரு, நடுத்தெரு, கோவிலின் நான்கு ரத வீதி, பேருந்து நிலைய சாலை, ெரயில்வே நிலைய சாலை உள்ளிட்ட நகரின் அனைத்து முக்கிய சாலைகளிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து கடைகளும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டன.

    இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியில் நேற்று பகல் 12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

    நேற்று முதல் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும் 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பாம்பன் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடையிலும் மதுபாட்டில்கள் வாங்க நேற்று காலை கடை திறப்பதற்கு முன்பே ஏராளமான குடிமகன்கள் குவிந்திருந்தனர். எந்த ஒரு டாஸ்மாக் கடையிலும் சமூக இடைவெளி ஏதும் பின்பற்றப்படாததுடன் பெரும்பாலானோர் முக கவசமும் அணியவில்லை.

    ஒருபுறம் குடிமகன்கள் மது பாட்டில் வாங்க கூட்டமாக நின்று கொண்டிருந்த நிலையில் மறுபுறம் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பாம்பன் ெரயில்வே நிலையம் செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஏராளமான பெண்கள் அரிசி, சீனி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து வாங்கி சென்றனர்.

    குடும்பத்தின் அத்தியாவசிய தேவைக்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க காத்திருக்க மறுபுறம் குடிமகன்கள் மதுபாட்டில்கள் வாங்க குவிந்திருந்தது சமூக ஆர்வலர்களை வேதனை அடைய செய்தது.
    Next Story
    ×