search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கம்பத்திலிருந்து கேரளாவுக்கு காரில் கடத்திய 80 மதுபாட்டில்கள் பறிமுதல்

    தமிழக எல்லை குமுளியில் தமிழக போலீசார் சோதனை செய்யாமல் விட்ட வாகனத்திலிருந்து, கேரள கலால் துறை போலீசார்கள் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    தமிழக எல்லை குமுளியில் தமிழக போலீசார் சோதனை செய்யாமல் விட்ட வாகனத்திலிருந்து, கேரள கலால் துறை போலீசார்கள் 80 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார் காரை பறிமுதல் செய்தனர்.

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கேரளாவில் வரும் ஞாயிறு வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலிருந்து வாகனங்கள் எதுவும் செல்வதில்லை. காய்கறி, பால், பலசரக்கு, மருத்துவம், இறப்பு போன்ற மிக முக்கியவைகளுக்காக மட்டுமே தமிழகத்தில் இருந்து குமுளி வழியாக வாகனங்கள் கேரளாவுக்குள் செல்கிறது. இந்நிலையில் நேற்று குமுளி எல்லையில் கேரள கலால்துறை சோதனைச்சாவடியில் இன்ஸ்பெக்டர்கள் ராய், போலீசார் ராஜ்குமார், ரவி, பென்னி ஜோசப், சஜிமோன் உட்பட போலீசார்கள் வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தமிழகத்தில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகத்தின்பேரில் காரை சோதனை செய்தனர். அப்போது காரின் இரண்டு கதவுகளின் உள்பகுதியில் 80 மதுபாட்டில்கள் ஒளித்து கடத்தியது தெரிய வந்தது.

    விசாரணையில் அவர்கள் இருவரும் வண்டிப்பெரியாறு எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த லாசர் மகன் கிறிஸ்டோபர் ஆன்டணி (32) மற்றும் அந்தோணி மகன் செல்வகுமார்(31) என்பதும், பொதுமுடக்கத்தால் கேரளாவில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால், கம்பத்தில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து மதுபாட்டிலை விலைக்கு வாங்கி கேரளாவில் அதிகவிலைக்கு விற்க கொ£ண்டு சென்றதும் தெரியவந்தது. மதுபாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்த கேரள போலீசார்கள் இருவரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×