search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரெம்டெசிவிர் மருந்தை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரையில் விற்கும் புரோக்கர்கள் தமிழகம் முழுவதும் கைது

    சென்னையில் பல இடங்களில் ரெம்டெசிவிர் மருந்தை கடத்தி கூடுதல் விலைக்கு பலரும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் அபாய கட்டத்தில் இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு ரெம் டெசிவிர் மருந்து செலுத்தப்படுகிறது.

    தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பலர் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்கிறார்கள்.

    இதையடுத்து கடந்த 10 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் ரெம் டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் 500 பேருக்கு மட்டுமே டோக்கன் முறையில் இந்த மருந்து வழங்கப்படுகிறது.

    இந்த மருந்தின் விலை ரூ.1,568 என்று அரசால் நிர்னயிக்கப்பட்டுள்ளது. வெளி மார்க்கெட்டில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு நிலவும் நிலையில் கூடுதல் விலைக்கும் விற்கப்படுகிறது. ஆனால் கீழ்ப்பாக்கத்தில் குறைந்த விலைக்கு ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதால் அதனை வாங்க மக்கள் தினமும் அலைமோதுகிறார்கள்.

    இன்று காலையிலும் ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று டோக்கன் வாங்கிய சிலர் இரவிலும் கீழ்ப்பாக்கம் பகுதியிலேயே காத்திருந்து காலையில் மருந்து வாங்க வரிசையில் நின்றனர்.

    இப்படி அரசு ஆஸ்பத்திரியில் மக்கள் ரெம்டெசிவிர் மருந்துக்காக காத்துக் கிடக்கும் நிலையில் கள்ளச்சந்தையில் அந்த மருந்தை பதுக்கி கூடுதல் விலைக்கு புரோக்கர்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் ரே‌ஷன் பொருள்களை கடத்தி விற்பனை செய்வதை தடுக்க சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் சென்னை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கவும், தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    சென்னையில் தாம்பரத்தில் கடந்த வாரம் ரெம் டெசிவிர் மருந்தை பதுக்கி விற்ற டாக்டர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதன்பிறகு சென்னையில் பல இடங்களில் ரெம்டெசிவிர் மருந்தை கடத்தி கூடுதல் விலைக்கு பலரும் விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனைக்காக புரோக்கர்களும் அதிகரித்துள்ளனர்.

    கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில் ரெம்டெசிவிர் மருந்தின் தேவையும் நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் கள்ளச்சந்தையில் அதனை எவ்வளவு ரூபாய் கொடுத்தும் வாங்குவதற்கு பொதுமக்களும் தயாராக இருக்கிறார்கள்.

    ரூ.30 ஆயிரம் வரை ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்கிறார்கள். ரூ.20 ஆயிரத்த்தில் இருந்து ரூ.30 ஆயிரம் வரையில் விற்பனை செய்கிறார்கள். ஆஸ்பத்திரி ஊழியர்கள், மருந்தகத்தில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோர் அதனை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்துள்ளது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கைது நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    புரசைவாக்கம் டானா தெருவில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக வேப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மருந்தகத்தில் வேலை செய்து வந்த ஜெய்சூர்யா என்பவர் அதனை திருடி விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    இந்த மருந்தை ஜெயசூர்யா மதுரவாயலை சேர்ந்த ஸ்டாலின் தாமஸ் என்பவருக்கு ரூ.36 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் தாமசையும் போலீசார் கைது செய்தனர்.

    இதற்கிடையே சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் சூளை தபால் நிலையம் அருகில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது ரெம்டெசிவிர் மருந்தை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். கொருக்கு பேட்டை மண்ணப்பன் தெருவை சேர்ந்த இவர் சூளை வெங்கடாசலம் தெருவில் மருந்து மொத்த வியாபார கடை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

    அவரிடம் இருந்து 12 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டன. இந்தமருந்துகளை ரூ.16 ஆயிரத்துக்கு விற்பனை செய்வதாக கணேஷ் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

    ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் கணேசுக்கு விற்பனை செய்த நபர் யார் என்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே விழுப்புரத்தில் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் புதிய பஸ் நிலையம் அருகில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்தனர். காரில் இருந்து 5 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் கைப்பற்றப்பட்டது.

    இதையடுத்து காரை ஓட்டி வந்திருந்த விபய தேவர் என்பவரும், அருகில் அமர்ந்து இருந்த முத்துராமன் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களில் விபய தேவர் புதுவையை சேர்ந்த டாக்டர் என்பது தெரிய வந்தது. புதுச்சேரி வில்லியனூர் ஆச்சாரியபுரம் ஓம் கணபதி நகர் பகுதியை சேர்ந்த இவர் செஞ்சி அருகே உள்ள நாட்டார் மங்களத்தில் ஆஸ்பத்திரி வைத்துள்ளார்.

    முத்துராமன் திண்டிவனத்தை சேர்ந்தவர். விழுப்புரத்தில் மருந்துக்கடை வைத்துள்ளார். இருவரும் சேர்ந்து கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை ரூ.19 ஆயிரத்துக்கு விற்பனை செய்ய எடுத்துச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

    இவர்களை போன்று கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்வதை தடுக்க மாநிலம் முழுவதும் போலீஸ் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. 

    Next Story
    ×