search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    3 ஓட்டு எண்ணும் மையங்களிலும் கடும் கட்டுப்பாடுகள்

    ஓட்டு எண்ணிக்கை அன்று அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர வேறு யாரையும் வளாகத்துக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னையில் 16 தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி ஆகிய 3 இடங்களில் எண்ணப்படுகிறது.

    ஆர்.கே.நகர், திரு.வி.க. நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் ராணிமேரி கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் தொகுதிகளின் ஓட்டுகள் லயோலா கல்லூரியிலும் எண்ணப்படுகிறது.

    விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய சட்டசபை தொகுதிகளின் ஓட்டுகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் எண்ணப்படுகிறது.

    சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் ஓட்டு எண்ணும் மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    வருகிற 2-ந் தேதி அதனை முழுமையாக கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் மையங்களுக்குள் செல்வதற்கு அரசியல் கட்சியினருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அதனை வைத்து இருக்கும் அரசியல் கட்சியினரை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா  தடுப்பூசி

    ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வரும் முகவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு இருக்க வேண்டும் அல்லது தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ற 2 உத்தரவையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதற்குரிய ஆவணங்களை காட்டிய பிறகே அவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடல்வெப்ப நிலை பரிசோதனையின்போது லேசான காய்ச்சல் அறிகுறி இருந்தால் அவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வெற்றி பெற்ற வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே சான்றிதழ் பெறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெற்றி பெற்றவர்கள் எந்தவித கொண்டாட்டங்களிலும் கூட்டமாக இணைந்து ஈடுபடுவதை போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஓட்டு எண்ணிக்கை அன்று அங்கீகரிக்கப்பட்ட முகவர்களை தவிர வேறு யாரையும் வளாகத்துக்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதனை காவலில் உள்ள போலீசார் முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, ராணிமேரி கல்லூரி, அண்ணாபல்கலைக்கழகம் உள்ளிட்ட 3 மையங்களும் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினரின் முழு கட்டுப்பாட்டில் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.

    லயோலா கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக மின்னணு எந்திரங்கள் அறைகளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அறைகள் முன்பும் 2 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    கட்டுப்பாட்டு அறையில் 3 தொலைக்காட்சிகள் நிறுவப்பட்டு அதன் மூலமாக வளாகம் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. இதில் கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஓடிக் கொண்டே இருக்கின்றன.

    லயோலா கல்லூரி உட்பட அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மின்னணு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் முன்பும் அதனை சுற்றியும் பாதுகாப்புக்காக கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை முழுமையாக காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அரசியல் கட்சி ஏஜெண்டுகள் கடந்த 4 வாரங்களாக தீவிரமாக கண்காணித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×