search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெரு மற்றும் ஜெயங்கொண்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.
    X
    பெரம்பலூர் போஸ்ட் ஆபீஸ் தெரு மற்றும் ஜெயங்கொண்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததை படத்தில் காணலாம்.

    இரவு நேர ஊரடங்கால் அரியலூர்- பெரம்பலூர் மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடின

    இரவு நேர ஊரடங்கால் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
    பெரம்பலூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்கள் இரவு 9 மணிக்கு முன்னதாகவே மூடப்பட்டதால், கடை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் பெரம்பலூர் பஸ் நிலையங்களில் சில கடைகள் 10 மணிக்கு மேலும் மூடப்படாமல் இருந்தன.

    இரவு நேர ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லாததால், பெரம்பலூர் மாவட்டத்தில் இரவு 9.30 மணிக்கு மேல் வாகன போக்குவரத்து இல்லாமல் சாலைகள், பஸ் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு நேர ஊரடங்கை மீறி வெளியில் நடமாடியவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் இயங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்தனர். மருத்துவமனைகள், மருந்தகங்கள் 24 மணி நேரமும் இயங்கின.

    இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதையொட்டி பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடின. இதையொட்டி நேற்று இரவு 9 மணிக்கு மேல் அரியலூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. பெரம்பலூர் செல்ல வேண்டிய ஒரு முதியவர் பஸ் இல்லாததால் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினார். இதேபோல் ஜெயங்கொண்டம், செந்துறை, திட்டகுடி, பெரம்பலூர், தஞ்சாவூர் நகரங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் பஸ்கள் இயக்கப்படாததால் சிரமப்பட்டனர். சிலர் பஸ் நிலையத்தில் தங்கினார்கள்.

    ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் வணிகர்கள் தாமாக முன்வந்து இரவு 8 மணிக்கே பெரும்பாலான கடைகள் அடைத்தனர். இதனால் முக்கிய வீதிகள், கடைவீதி, 4 ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. ஜெயங்கொண்டம் போலீசார் கடைவீதி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, ரோந்து வாகனத்தில் ரோந்து சென்றும் கண்காணித்தனர்.

    Next Story
    ×