search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரவீன் குமார்
    X
    பிரவீன் குமார்

    நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலி

    நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் பலியான சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவொற்றியூர்:

    சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரபு தாஸ். தையல்காரர். இவருடைய மகன் பிரவீன்குமார் (வயது 14). இவர், திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை பிரவீன்குமார் தனது நண்பர்களான திமோத்தேயு, புவனேஷ்குமார் ஆகியோருடன் திருவொற்றியூர் திருச்சிணாங்குப்பம் அருகே கடலில் குளித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

    அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலை பிரவீன்குமாரை கடலுக்குள் இழுத்துச்சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த திமோத்தேயும், புவனேஷ்குமாரும் தங்கள் நண்பனை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் ஓடிவந்து கடலுக்குள் குதித்து பிரவீன்குமாரை தேடினர்.

    ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து கடலுக்குள் மாயமான மாணவனை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று காலை 10 மணியளவில் அதே இடத்தில் மாணவன் பிரவீன்குமார் உடல் கடலில் மிதந்தது. உடனடியாக தீயணைப்பு படையினர் மாணவன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்குப்பதிவு செய்து மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடசென்னையில் 8 இடங்களில் கடல் ஆழமானது. எனவே கடலில் குளிக்க வேண்டாம். கடலில் மூழ்கி இதுவரை எத்தனை பேர் இறந்துள்ளனர் என புள்ளி விவரமாக எழுதி வைத்துள்ளோம். கடலில் குளிப்பவர்களை கண்காணிப்பதற்காக தனியாக ஒரு காவல் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அப்பகுதி மீனவர்களையும் யாராவது கடலில் குளித்தால் வெளியேற்றுமாறு கூறியுள்ளோம்.

    கடலரிப்பை தடுக்க போடப்பட்டுள்ள தூண்டில் வளைவு மீது நடப்பவர்களை தடுப்பதற்காக கம்பு கட்டி வைத்துள்ளோம். இத்தனை எச்சரிக்கைகளையும் மீறி மாணவர்கள் கடலில் குளித்து தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் என்ன செய்கிறார்கள்? என்பதை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×