search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடை நீக்கம்
    X
    பணியிடை நீக்கம்

    தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகார்- இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம்

    தபால் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா புகாரில் திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 6 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் பணியாற்றும் போலீசாருக்கு தபால் ஓட்டுப்பதிவு நேற்று நடந்தது. இதற்காக திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசாரின் தபால் ஓட்டுக்களை பெறுவதற்காக அவர்களுக்கு கவரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக போலீஸ் கமிஷனருக்கு நேற்றுமுன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கமிஷனர் லோகநாதன், மேற்குதொகுதிக்கு உட்பட்ட தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, எடமலைப்பட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்த உத்தரவிட்டார். ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை போலீஸ் நிலையங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீஸ் நிலையத்தில் இருந்த பீரோக்களில் பணத்துடன் கூடிய கவர்கள் கைப்பற்றப்பட்டன. அவற்றில் மொத்தம் ரூ.1½ லட்சம் வரை இருந்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அந்தந்த போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள், எழுத்தர்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் போலீஸ் கமிஷனர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், போலீஸ் ஏட்டு சுகந்தி, அரசு மருத்துவமனை சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லாமேரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, நுண்ணறிவுபிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கரன், கலியமூர்த்தி ஆகிய 6 பேரை அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டார்.

    இவர்களில் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாமேரி ஆகியோர் சமீபத்தில் தான் தில்லைநகர், அரசு மருத்துவமனை போலீஸ்நிலையங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டு வந்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி, எழுத்தர் சுகந்தி, தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் மணிவண்ணபாரதி உள்பட 5 பேர் மீது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதன் எதிரொலியாக மேற்கு தொகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வரும் அனைத்து போலீசாரையும் கூண்டோடு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறப்படுகிறது.

    இதுகுறித்து தற்போது மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்தநிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×