search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நூல்மில் தீப்பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.
    X
    நூல்மில் தீப்பிடித்து எரிந்ததை படத்தில் காணலாம்.

    காங்கேயம் அருகே நூல் மில்லில் பயங்கர தீ விபத்து - ரூ.25 லட்சம் பஞ்சு, எந்திரம் எரிந்து நாசம்

    காங்கேயம் அருகே நூல் மில்லில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.
    காங்கேயம்:

    கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜஹான். இவர் காங்கேயத்தை அடுத்துள்ள படியூரில் கழிவு பஞ்சில் இருந்து நூல் தயாரிக்கும் மில் நடத்தி வருகிறார். இந்த மில்லில் 5 ஓ.இ. எந்திரம் பொருத்தியுள்ளார். இந்த மில்லில் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று அதிகாலையில் தொழிலாளர்கள் மில்லில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது 1.30 மணி அளவில் மில்லில் பஞ்சு வைத்திருந்த இடத்தில் திடீரென்று தீ பிடித்து எரிய தொடங்கியது. இதை கவனித்த அங்கிருந்த தொழிலாளர்கள் பதறியவாறு தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயின் வேகம் அதிகரித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.

    பின்னர் உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காங்கேயம் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியன் தலைமையில் 6 வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்க போராடினர். இருப்பினும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், திருப்பூரில் இருந்து 2 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

    பின்னர் 3 வாகனங்களில் இருந்தும் வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.25 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் எந்திரங்கள், கட்டிடம் ஆகியவை எரிந்து நாசம் ஆனது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×