
நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் ஆலங்குளம் அருகே உள்ளது வட்டாலூர் விலக்கு. இந்த பகுதியில் இருந்து பூலாங்குளம் செல்வதற்கு பாதை ஒன்று உள்ளது.
இன்று காலை இந்த பாதை வழியாக பூலாங்குளத்திற்கு சென்ற சிலர் அப்பகுதியில் உள்ள கொய்யா தோப்பு ஒன்றில் சாக்கு மூட்டையில் ஒரு உடல் கிடப்பதை பார்த்தனர். உடனடியாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்த தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங், ஆலங்குளம் டி.எஸ்.பி. பொன்னிவளவன் ஆகியோரும் அங்கு சென்றனர்.
பின்னர் அங்கு மூட்டையை அவிழ்த்து பார்த்த போது அதில் ஒரு பெண் பிணமாக கிடந்தார். அவரது கை மற்றும் கால் கட்டப்பட்டு இருந்தது. அவரது உடலில் லேசான காயங்கள் இருந்தது.
ஆனால் முகம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு கம்பால் அடித்தும், கல்லால் தாக்கப்பட்டும் முற்றிலும் சிதைந்த நிலையில் காணப்பட்டது.
அந்த பெண் யார்? அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அவரது உடல் கண்டு பிடிக்கப்பட்ட இடத்தில் ஆட்டோ டயர் தடம் பதிந்து உள்ளது.
இதனால் அந்த பெண்ணை கொலை செய்து சாக்கு மூட்டையில் கட்டி ஆட்டோவில் கொண்டு வந்து மர்மநபர்கள் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்த இடத்திற்கு சற்று தொலைவில் கல் குவாரியும், நெல்லை- தென்காசி நெடுஞ்சாலையும் அதன் அருகே ஆலை ஒன்றும் அமைந்துள்ளது.
அந்த ஆலையில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவை வைத்து அந்த பகுதியில் சென்ற ஆட்டோக்கள் குறித்த பதிவை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.