search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா பாண்டியன்
    X
    தா பாண்டியன்

    இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், தேசிய குழு உறுப்பினருமான தா.பாண்டியன் (வயது 89) முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

    இதையடுத்து கடந்த 24-ந்தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். சிறுநீரக பிரச்சினை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்கள் எந்தவித பலனையும் அளிக்கவில்லை.

    இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தா.பாண்டியன் இன்று காலை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடல் தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு அவரது உடலுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று இரவு 7 மணி வரை அவரது உடல் அங்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டு இருக்கும்.

    அதன் பின்னர் சொந்த ஊரான உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலை பட்டிக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு நாளை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    தமிழக அரசியலில் பிரபலமான தலைவராக விளங்கிய தா.பாண்டியனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    1932-ம் ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைபட்டி கிராமத்தில் தாவீது-தவமணி தம்பதியினருக்கு 4-வது மகனாக தா.பாண்டியன் பிறந்தார்.

    பள்ளி பருவத்திலேயே மேடை பேச்சுக்களில் பலமுறை பங்கேற்றுள்ள தா.பாண்டியன் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படித்தபோது அரசியலில் ஈடுபட தொடங்கினார்.

    அப்போது மாணவர் பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் அதே கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியில் சேர்ந்து கலை இலக்கிய பெருமன்றத்திலும் பணிபுரிந்துள்ளார்.

    1983-ல் ஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கிய தா.பாண்டியன் 2000-ம் ஆண்டு வரை அதனை நடத்தி வந்தார். பின்னர் அந்த கட்சியை கலைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சியில் இணைந்து பணியாற்றினார். 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.

    மறைந்த பிரதமர்கள் இந்திரா-ராஜீவ்காந்தி ஆகியோரது மேடை பேச்சுக்களையும் தா.பாண்டியன் மொழி பெயர்த்துள்ளார்.

    அகில இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரின் அன்பையும் தா.பாண்டியன் பெற்றிருந்தார். அரசியல்வாதியாக மட்டுமின்றி சிறந்த எழுத்தாளராக அவர் திகழ்ந்தார்.

    தா.பாண்டியன் 8 புத்தகங்களை எழுதி இருக்கிறார். 6 மொழி பெயர்ப்பு புத்தங்களையும் உருவாக்கி உள்ளார். சவுக்கடி என்ற புனைபெயரில் பல்வேறு கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 1962-ம் ஆண்டில் ஜனசக்தி பத்திரிகையில் எழுத்து பணியை தொடங்கிய தா.பாண்டியன் தொடர்ந்து எழுதி வந்தார்.

    Next Story
    ×