search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பாண்டியன்
    X
    தா.பாண்டியன்

    சிறந்த பேச்சாற்றல் கொண்ட தலைவர் தா.பாண்டியன்

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக 2005 முதல் 2015 முதல் தொடர்ந்து மூன்று முறை தேர்வானவர் தா.பாண்டியன்.
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 88. 

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வெள்ளைமலைப்பட்டியில் 1932ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி பிறந்தார் தா.பாண்டியன். மாணவர் பருவத்திலேயே கம்யூனிச சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்ட அவர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். அழகப்பா கல்லூரி பேராசிரியராக பணியை தொடங்கிய தா.பாண்டியன், அதன்பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர உறுப்பினராக இணைந்தார்.

    தா.பாண்டியன்

    1983ல் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கி, 1983 முதல் 2000 வரை மாநில செயலாளராக இருந்தார் தா.பாண்டியன். அதன்பின்னர் 2000ல் கட்சியை கலைத்துவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மீண்டும் இணைந்தார். 2005 முதல் 2015 முதல் தொடர்ந்து மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளராக தேர்வானார். 1989, 1991 தேர்தலில் வடசென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை மக்களவை உறுப்பினராக தா.பாண்டியன் இருந்துள்ளார். 

    சிறந்த பேச்சாற்றல் கொண்ட தலைவரான இவர், கட்சி பேதமின்றி பலதரப்பட்ட தலைவர்களின் அன்பைப் பெற்றவர். அரசியலாக இருந்தாலும் சரி, சமூக பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, அவரது கருத்துக்களை மிக தெளிவாக எடுத்துரைப்பார்.  தமிழ் இலக்கியத்திலும் தனித்திறன் கொண்டவர். இந்திராகாந்தி முதல் ராஜீவ் காந்தி வரை பல தலைவர்களின் பேச்சுக்களை மொழி பெயர்த்துள்ளார்.

    ஜனசக்தியில் 1962ல் எழுதத் தொடங்கிய தா.பாண்டியன், தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். 8 நூல்கள், 6 மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்டவற்றை எழுதி உள்ளார். மேடைப்பேச்சு,  பொதுவுடைமயரின் வருங்காலம் போன்ற நூல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

    சிறந்த ஆளுமைமிக்க தலைவைராக திகழ்ந்த தா.பாண்டியன் இன்று நம்மைவிட்டு மறைந்துவிட்டார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 
    Next Story
    ×