search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாநகரபோலீஸ் கமிஷனராக அன்புபொறுப்பேற்ற போது எடுத்த படம்.
    X
    நெல்லை மாநகரபோலீஸ் கமிஷனராக அன்புபொறுப்பேற்ற போது எடுத்த படம்.

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக அன்பு பொறுப்பேற்பு

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக அன்பு பொறுப்பு ஏற்றார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய தீபக் தாமோர் தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணைய ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக பணியாற்றிய அன்பு, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

    இதையடுத்து அவர் நேற்று காலை பாளையங்கோட்டையில் உள்ள நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவரை போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஏற்கனவே கடந்த 2015-2016-ம் ஆண்டு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றி உள்ளேன். அப்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராகவும் கூடுதலாக பொறுப்பேற்று பணியாற்றினேன். எனவே நெல்லை மாநகரத்தை பற்றி எனக்கு நன்கு தெரியும். இங்கு போலீஸ் கமிஷனராக மீண்டும் பொறுப்பேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    போலீசார் பொதுமக்களின் நண்பர்கள். இதனை உணர்ந்து பொதுமக்கள் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுமக்கள் அச்சமின்றி புகார் மனுக்களை அளிக்கலாம். அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும். நெல்லை மாநகரில் சட்டம்-ஒழுங்கை பேணி காப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்காக போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அன்பு, கடந்த 2001-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்று, 2004-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியை தொடங்கினார். பின்னர் கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராகவும், மதுரை, வேலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் பணியாற்றினார்.

    2015-2016-ம் ஆண்டு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றினார். பின்னர் பல்வேறு பொறுப்புகளிலும் திறம்பட பணியாற்றிய அன்பு, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றினார். தற்போது நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
    Next Story
    ×