search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவம் நாளை மறுநாள் வருகிறது

    தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப்படை நாளை மறுநாள் வருகிறது. டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக இவர்கள் சென்னை வருகிறார்கள்.
    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு வருகிற ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகிறது.

    இதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் வந்து மாவட்ட கலெக்டர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இந்தநிலையில் தமிழக தேர்தல் பாதுகாப்புக்காக 45 கம்பெனி துணை ராணுவப்படை நாளை மறுநாள் வருகிறது. டெல்லியில் இருந்து ரெயில் மூலமாக இவர்கள் சென்னை வருகிறார்கள்.

    ஒவ்வொரு கம்பெனியிலும் 100 வீரர்கள் வரை இடம்பெற்று இருப்பார்கள்.

    சென்னையில் தென் சென்னை, வடசென்னை, மேற்கு சென்னை, கிழக்கு சென்னை ஆகிய 4 இணை கமி‌ஷனர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுக்கு கீழ் 3 துணை ஆணையர்கள் வருகிறார்கள்.

    அதன்படி பார்த்தால் சென்னையில் சட்டம்-ஒழுங்கு துணை ஆணையர்கள் 12 பேர் உள்ளனர். ஒவ்வொரு துணை ஆணையரின் கீழும் ஒரு கம்பெனி துணை ராணுவப்படையை களம் இறக்க முடிவு செய்துள்ளனர்.

    சென்னையில் மட்டும் 1,200 பேர் வரையில் தேர்தல் பாதுகாப்புக்காக தற்போது பிரித்து அனுப்பப்பட உள்ளனர். மீதம் உள்ள 33 கம்பெனி துணை ராணுவப்படையினரும் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். அந்தந்த பகுதிகளுக்கு ரெயில்கள் மூலமாக இந்த துணை ராணுவப்படையினர் செல்ல உள்ளனர்.

    தமிழகத்தில் 7,000 பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்.

    இந்த பதட்டமான சாவடிகளில் துணை ராணுவப் படையினர் முதலில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுவார்கள். அதன் பிறகே உள்ளூர் போலீசார் பணியில் இறங்குவார்கள்.

    துணை ராணுவப் படையினரின் சோதனைக்கு பிறகே வாக்குச்சாவடிக்குள் யாரும் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×