search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்நடை மருந்தக கட்டிடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம்.
    X
    கால்நடை மருந்தக கட்டிடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றியபோது எடுத்த படம்.

    கரூர் மாவட்டத்தில் கால்நடைகள் பயன்பெறும் வகையில் 88 மருந்தகங்கள் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

    கரூர் மாவட்டத்தில் கால்நடைகள் பயன் பெறும் வகையில் 88 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    கரூர்:

    கரூர் நகராட்சிக்கு உட்பட்ட எஸ்.வெள்ளாளப்பட்டியில் உள்ள கால்நடை கிளை நிலையத்தை தரம் உயர்த்தி புதிய கால்நடை மருந்தக கட்டிடம் கட்டப்பட்டது. இதனை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

    பின்னர் அமைச்சர் தெரிவித்ததாவது:-

    கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பெருக விலையில்லா ஆடு மற்றும் கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். அதன்படி, கரூர் மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் 400 பயனாளிகளுக்கு 400 கறவை மாடுகளும், 2,476 பயனாளிக்கு தலா 4 ஆடுகள் வீதம் 9,904 ஆடுகளும், 3,200 பயனாளிகளுக்கு தலா 25 கோழிகள் வீதம் 80 ஆயிரம் கோழிகளும் விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ளது.

    அத்துடன் மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் தேசிய ஆடு வளர்ப்பு திட்டத்தின்கீழ் 270 பயனாளிகளுக்கு தலா 11 ஆடுகள் வீதம் 2,970 ஆடுகளும்வழங்கப்பட்டுள்ளது.

    கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 93 ஆயிரம் மாடுகள் மற்றும் எருமைகளும், 4 லட்சத்து 90 ஆயிரம் செம்மறி மற்றும் வெள்ளாடுகளும், 24 லட்சம் கோழிகளும் வளர்க்கப்பட்டு வருகிறது. கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கிராமங்கள்தோறும் கால்நடை பாதுகாப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    கரூர் மாவட்டத்தில் 73 கால்நடை மருந்தகங்களும், 12 கால்நடை கிளை நிலையங்களும், 3 கால்நடை மருத்துவமனைகளும் என மொத்தம் 88 மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க அம்மா கால்நடை ஆம்புலன்ஸ் வசதியும் செயல்பட்டு வருகின்றது. எஸ்.வெள்ளாளப்பட்டி பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள தரம் உயர்த்தப்பட்ட கால்நடை மருந்தகத்தின் மூலம் சுமார் 5 ஆயிரம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் கீதா எம்.எல்.ஏ., கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×