search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
    X
    பெரம்பலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்

    பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக பேசி தீர்வு காண தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் பெரம்பலூரில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார்.

    உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பில் உள்ள தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி., டி.டி.எஸ்.எப்., எச்.எம்.எஸ்., ஏ.ஏ.எல்.எப்., எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்போது, அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

    அதே கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் அரியலூரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசாவிட்டால் வேலை நிறுத்தம் குறித்து அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவித்தனர். போராட்டத்தில் தொ.மு.ச. செயலாளர் சட்டநாதன், கிளை தலைவர் கனகராஜ் மற்றும் சி.ஐ.டி.யு., அம்பேத்கர் தொழிற்சங்கம், எஸ்.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். 

    இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு, அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு கிளை செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கொளஞ்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும், பேச்சுவார்த்தையை நடத்தி ஊதியம் வழங்க தவறினால் அடுத்த கட்டமாக மண்டல அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போராட்டத்தில் எல்.பி.எப், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட அனைத்து சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×