search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீண்டும் பல்நோக்கு சிகிச்சை மையமாக மாறிய கொரோனா வார்டு.
    X
    மீண்டும் பல்நோக்கு சிகிச்சை மையமாக மாறிய கொரோனா வார்டு.

    கொரோனா சிறப்பு வார்டு பல்நோக்கு சிகிச்சை மையமாக மீண்டும் மாற்றம்

    திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு வார்டு 10 மாதங்களுக்கு பின் பல்நோக்கு சிகிச்சை மையமா மீண்டும் மாற்றப்பட்டது.
    திருச்சி:


    திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். 6 அடுக்கு மாடிகளைக் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, இருதயவியல், குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை, உளவியல், கதிரியக்கவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் திருச்சி அரசு ஆஸ்பத்திரியின் புதிய கட்டிடமான பல்நோக்கு சிகிச்சை மையம் முற்றிலும் கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டது. அங்கு கொரோனா சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    தற்போது கொரோனா தாக்கம் வெகுவாக குறைந்து விட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியின் பழைய கட்டிட பகுதியில் தனி வார்டு அமைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 10 மாதங்களாக பல்நோக்கு சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த புதிய கட்டிடம் முற்றிலும் தூய்மைப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டு நேற்று முதல் வழக்கம்போல் பல்நோக்கு மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.

    அதையொட்டி அரசு ஆஸ்பத்திரி முழுவதும் வண்ண பலூன்கள் மற்றும் வண்ண பேப்பர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    பல்நோக்கு சிகிச்சை மைய கட்டிடத்தை டீன் டாக்டர் வனிதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    பல்நோக்கு சிகிச்சை மையத்தில் மீண்டும் அனைத்து நோய்களுக்கும் வழக்கம்போல் சிகிச்சை மேற்கொள்ளப்படும். கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனோ நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் கொரோனா முன் களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என 1,200 பேருக்கு மேல் கோவி சீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி மருந்து செலுத்திக் கொண்டவர்களுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன், டாக்டர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×