search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆலந்தலை அருகே மீனவர்கள் தொடர் போராட்டம்

    ஆலந்தலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே ஆலந்தலை மீனவர் கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக கடலரிப்பு அதிகரித்து வீடுகளில் கடல் நீர் உட்புகுந்து படகுகளுக்கும், மீனவர்களின் உடமைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதனால் உடனடியாக தூண்டில் வளைவு பாலம் அமைக்க அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ரூ.52 கோடியில் அரசு திட்ட மதிப்பீடு செய்துள்ளது.

    இந்நிலையில் தூண்டில் வளைவு பாலம் அமைப்பதற்கு மத்திய சுற்று சூழல் அமைச்சகத்தில் தடையில்லா சான்று பெறுவதற்கு மாநில அரசு விண்ணப்பித்துள்ளது. இதனால் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி காலதாமதம் ஆகிவருகிறது. இப்பணி தொடங்கும் வரை காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கல்லாமொழி கடல் பகுதியில் நிலக்கரி இறங்கு தளம் அமைப்பதற்கு கடலில் பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அங்கு சென்று மீனவர்கள் போராட போவதாக அரசு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், தாசில்தார் முருகேசன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலந்தலை கிராமத்திற்கு சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 10 நாட்களில் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் மீன்பிடித்தொழிலுக்கு செல்லுங்கள் என கூறினர்.

    ஆனால் இறுதிவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மீனவர்கள் ஆலந்தலை கரை பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணி தொடங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×