search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழைய ஆரம்ப சுகாதார நிலையத்தின் அறை ஒன்றில் சுவரில் மழைநீர் கசிந்திருக்கும் காட்சி .
    X
    பழைய ஆரம்ப சுகாதார நிலையத்தின் அறை ஒன்றில் சுவரில் மழைநீர் கசிந்திருக்கும் காட்சி .

    புதுமடத்தில் ஆபத்தான நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் - புதிய இடத்திற்கு மாற்ற கோரிக்கை

    புதுமடத்தில் ஆபத்தான நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இதை புதிய கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பனைக்குளம்:

    மண்டபம் ஊராட்சி ஒன்றியம் புதுமடம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மிகவும் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட புதுமடம் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை நீண்டகாலமாக பயன்படுத்தி வருகின்றனர். மீனவர்கள், தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்களும் இந்த ஊராட்சியில் வசித்து வரும் நிலையில் அவர்கள் அவசர காலங்களில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த சுகாதார நிலையத்தில் போதிய வசதிகள் இல்லை. இந்தநிலையில் கடந்த 15 நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.. இதனால் சுகாதார நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்து மின்சார மீட்டர் வழியாகவும் தண்ணீர் கசிந்து வருகிறது. மேலும் பிரசவ வார்டு, உள்நோயாளிகள் வார்டு, நோயாளிகளை பரிசோதிக்க கூடிய அறை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது.

    இந்தநிலையில் அதன் அருகாமையில் தேசிய சுகாதார திட்டம் மற்றும் சிறப்பு நிதிகள் மூலம் புதிய சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளன. இந்த கட்டிடம் திறக்கப்பட்டால் இந்தப் பகுதியில் உள்ள நோயாளிகள் எந்தவிதமான சிரமங்களும் இன்றி அவர்கள் பயனடைவார்கள். ஆனால் இதுவரை அந்தக் கட்டிடத்தை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதுகுறித்து மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம் கூறும்போது, புதுமடம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் பழமையாகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக அந்த ஊராட்சி மன்ற தலைவர் காமில் ஷூசைன் என்னிடம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சம்பந்தப்பட்ட துறையினருக்கு யூனியன் அலுவலகத்தில் மூலம் தகவல் அளித்து பழமையாக உள்ள கட்டிடத்தை இடம் மாற்றி புதிய கட்டிடத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    புதுமடம் ஊராட்சி தலைவர் கூறும்போது, சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் எடுத்துக்கூறியும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது அதன் அருகாமையில் உள்ள சிறிய கட்டிடத்தில் மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். எனவே இந்த பகுதியில் வசிக்கக்கூடிய மீனவர்கள், பனை தொழிலாளர்கள், ஏழை தொழிலாளர்கள் நலன் கருதி உடனடியாக கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

    Next Story
    ×