search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாவட்டத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.19¾ கோடிக்கு மது விற்பனை

    பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களில் சேலம் மாவட்டத்தில் ரூ.19¾ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 220 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் பார் வசதிகள் உள்ளன. தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட மதுவிற்பனை மும்முரமாக இருக்கும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி விற்பனை அதிகமாக இருக்கும் காரணத்தால் முன்னதாகவே தேவையான மதுப்பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைத்து இருப்பு வைக்கப்பட்டன. அதன்படி, பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 2 நாட்களாக மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக இருந்தது. இதனிடையே திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் பெரும்பாலானோர் நேற்று முன்தினமே மது பாட்டில்களை கூடுதலாக வாங்கி வைத்தனர்.

    இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் மட்டும் ரூ.11 கோடியே 57 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில் 16 ஆயிரத்து 67 பிராந்தி பெட்டிகளும், 6 ஆயிரத்து 452 பீர் பெட்டிகளும் விற்பனையானது. இந்த விற்பனை கடந்த ஆண்டை விட சுமார் ரூ.1¾ கோடி அதிகம் ஆகும்.

    போகி பண்டிகையான கடந்த 13-ந் தேதி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ.8 கோடியே 13 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 11 ஆயிரத்து 444 பிராந்தி பெட்டிகளும், 4 ஆயிரத்து 900 பீர் பெட்டிகளும் விற்பனை ஆனது. இதுவும் கடந்த ஆண்டை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×