search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குடிநீர் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர் கைது

    குடிநீர் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    பெரம்பூர்:

    சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட 39-வது வார்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகம் புதுவண்ணாரப்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு, புதிதாக கட்டிய தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு ஒருவர் மனுசெய்து இருந்தார்.

    அதற்கு அங்கு பணிபுரியும் ஊழியரான தண்டையார்பேட்டையை சேர்ந்த களப்பணியாளர் ராவ் (வயது 55) என்பவர் புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் தரும்படி கேட்டார்.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வீட்டின் உரிமையாளர், இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ஊழியரை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்த போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அதை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

    அதன்படி புகார்தாரர் ரசாயன பொடி தடவிய ரூ.15 ஆயிரத்தை நேற்று மாலை ராவ்விடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த ஆனந்தன் (52), காட்டாங்குளத்தூர் அடுத்த நின்னக்கரை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் வீடு கட்டுவதற்காக தடையில்லாச்சான்று கேட்டு திம்மாவரத்தில் உள்ள செங்கல்பட்டு வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.

    அதற்கு வேளாண்மை துணை இயக்குனராக பணிபுரியும் சுகுமாரன் (56), ரூ,20 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதுபற்றி ஆனந்தன் அளித்த புகாரின்பேரில் காஞ்சீபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், ரசாயன பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

    அதனை பெற்றுக்கொண்ட ஆனந்தன் லஞ்சமாக சுகுமாரனிடம் கொடுத்தார். அதை அவர் வாங்கியதும், சுகுமாரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×