search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோழிப் பண்ணை
    X
    கோழிப் பண்ணை

    நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் பீதியால் கறிக்கோழி விலை சரிவு

    பறவைக்காய்ச்சல் பீதியால் கறிக்கோழிகள் விற்பனை சரிந்து தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கறிக்கோழி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.14 குறைந்து இன்று காலை முதல் 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நாமக்கல்:

    கேரளா மற்றும் வட மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் அதனை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

    நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளை பாதுகாக்கும் வகையில் 45 அதி நவீன கண்காணிப்பு குழுக்களை மாவட்ட கலெக்டர் மெகராஜ் அமைத்து உத்தரவிட்டார். அந்த குழுவினர் நேரடியாக பண்ணைகளுக்கு சென்று நோய் தடுப்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

    அண்டை மாநிலங்களில் இருந்து கோழிப் பண்ணைகளுக்கு வந்த தீவன பொருட்களையும், கோழி எச்சங்களையும் பார்வையிட்டு நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். பறவைக்காய்ச்சல் தொடர்பாக நாமக்கல் மண்டலத்தில் கோழிப்பண்ணைகளில் இது வரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கால் நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் பகுதியில் இருந்து கேரளாவுக்கு தினமும் 2 கோடி முட்டைகள் விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. பறவை காய்ச்சல் பாதிப்பால் இங்கிருந்து வாகனங்கள் அந்த மாநிலத்திற்கு செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்ற வாகனங்கள் மட்டும் திரும்பி உள்ளன. அந்த வாகனங்கள் அனைத்தும் முழுமையாக தூய்மை படுத்தப்பட்டு வருகின்றன.

    நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட பண்ணைகளில் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. பறவை காய்ச்சல் பீதியால் பொது மக்கள் முட்டை வாங்க தயக்கம் காட்டுகின்றனர். முட்டைகள் வெளி மாநிலத்திற்கு கொண்டு செல்வதிலும், உள்ளூர் விற்பனையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 5.10-க்கு விற்கப்பட்ட முட்டை, நேற்று 4.85 ஆக சரிந்தது. மேலும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப முட்டைகளை விற்பனை செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே கறிக்கோழியையும் வாங்க பொது மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் கறிக்கோழி கொள்முதல் விலையும் குறைய தொடங்கி உள்ளது. பல்லடத்தில் நடந்த தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை (உயிருடன்) 92 ஆக நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது பறவைக்காய்ச்சல் பீதியால் கறிக்கோழிகள் விற்பனை சரிந்து தேக்கம் அடைந்துள்ளன. இதனால் கறிக்கோழி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.14 குறைந்து இன்று காலை முதல் 78-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×