search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தடுப்பூசி ஒத்திகை
    X
    தடுப்பூசி ஒத்திகை

    நாடு முழுவதும் இன்று 2ம் கட்ட தடுப்பூசி ஒத்திகை- தமிழகத்தில் 190 இடங்கள்

    இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ள நிலையில், நாடு முழுவதும் இன்று 2ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெறுகிறது.
    சென்னை:

    இந்தியாவில் சீரம் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசி மருந்தை அவசர கால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் அவசர கால தடுப்பூசி செலுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. 

    இதற்காக கடந்த 2-ந்தேதி நாடு முழுவதும் 74 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த ஒத்திகை வெற்றிகரமாக அமைந்தது.

    இதையடுத்து நாடு முழுவதும் இன்று தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெறுகிறது. மொத்தம் 736 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மருந்துக்கான ஒத்திகை நடைபெறுகிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

    தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. மொத்தம் 190 இடங்களில் ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளையும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகையையும் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலை ஆய்வை தொடங்கிய மத்திய மந்திரி ஹர்சவர்தன், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களை பாராட்டினார். 

    இன்று மதியம் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமியை நேரில் சந்திக்க உள்ளார்.

    அப்போது தமிழகத்துக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    தமிழகத்தில் தடுப்பு மருந்தை சேமிப்பதற்கு குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகள், தடுப்பு மருந்தை தடுப்பூசி செலுத்தும் மையத்துக்கு கொண்டு செல்ல குளிரூட்டப்பட்ட பெட்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளை சேமிக்க கட்டமைப்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×