search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X
    கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    பழங்குடியினர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை- ரூ.6¼ லட்சம் சிக்கியது

    கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் பணம் சிக்கியது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதி, உண்டு உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள 65 சமையலர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியானது.

    இதையடு்த்து மாவட்டம் முழுவதிலும் இருந்து 1,038 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான நேர்காணல் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெற்றது.

    இந்த நிலையில் சமையலர் பணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நல அலுவலகத்தில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர், விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் அமுதா மற்றும் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு யுவராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜேசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் ஏட்டுகள் உள்பட 9 பேர் நேற்று மாலை 5 மணியளவில் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலகத்தில் புகுந்தனர்.

    பின்னர் அலுவலகத்தின் ஜன்னல், கதவுகளை உள்பக்கமாக பூட்டி கொண்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட பழங்குடியினர் நல திட்ட அலுவலர் பிரகாஷ் மற்றும் ஊழியர்கள் அங்கு இருந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென புகுந்து சோதனை நடத்தியதை கண்டு அங்கிருந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் பதற்றம் அடைந்தனர்.

    இதையடுத்து திட்ட அலுவலர் பிரகாஷ் மற்றும் அலுவல உதவியாளர் செல்வராஜ் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அலுவலக உதவியாளர் செல்வராஜ் மூலம் சமையலர் பணிக்கு பலரிடம் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. வாங்கி லஞ்ச பணத்தை தனது வீட்டில் வைத்திருப்பதாக செல்வராஜ் தெரிவித்தார். இதை அடுத்து அவரை ஜீப்பில் அவரது வீட்டுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் சிக்கியது.

    பின்னர் செல்வராஜை அங்கிருந்து மீண்டும் அலுவலகத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அப்போது அவருடன் பணிபுரிந்து வரும் இளநிலை பொறியாளர் எழில்மாறனின் கார் அலுவலக வளாகத்தில் நின்றிருந்தது. இதை பார்த்த லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனே அந்த காரை சோதனை செய்தபோது அதில் ரூ.31 ஆயிரம் சிக்கியது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் முதல் கட்டமாக ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் சிக்கியது தெரியவந்தது.

    தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
    Next Story
    ×