search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    போலீஸ் போல நடித்து, தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் பணம்-நகை கொள்ளை

    சென்னை கே.கே.நகரில் போலீஸ் போல நடித்து, தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 43 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னை கே.கே.நகர் 11-வது செக்டார் பகுதியில் வசிப்பவர் பாண்டியன். தொழில் அதிபரான இவர் சமையல் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலையில் பாண்டியன் வீட்டில் இருந்தார். அப்போது 6 பேர் அவரது வீட்டுக்கு சென்றனர். அவர்கள் தங்களை சிறப்பு பிரிவு போலீஸ் என்று கூறினார்கள். ஆனால் போலீஸ் சீருடை அணியவில்லை. சாதாரண உடையில் டிப்-டாப்பாக காணப்பட்டனர். உங்கள் வீட்டில் கள்ளத்துப்பாக்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது, எனவே வீட்டில் சோதனை போட வேண்டும் என்றனர்.

    அதற்கு பாண்டியன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. என்னிடம் துப்பாக்கி எதுவும் இல்லை. தாராளமாக வீட்டில் சோதனை போட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

    போலீஸ் வேட ஆசாமிகள் பாண்டியன் வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை போட்டனர். பின்னர் துப்பாக்கி எதுவும் இல்லை என்று கூறி விட்டு சென்றனர். அவர்கள் போனதும் பாண்டியன் தனது வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த ரூ.12 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 43 பவுன் தங்க நகைகளை காணவில்லை. சோதனை போடுவது போல நடித்து, நகை-பணத்தை போலீஸ் வேடத்தில் வந்த ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்தது. பாண்டியன் இது குறித்து கே.கே.நகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் அந்த கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×