search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    உரிமத்தை புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயர் கைது

    திருவாரூரில், அரிசி ஆலை உரிமத்தை புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் பொறிவைத்து பிடித்தனர்
    திருவாரூர்:

    திருவாரூர் சாமி மடத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி(வயது 58). இவர், தஞ்சை சாலையில் அரிசி ஆலை வைத்துள்ளார். இவருடைய ஆலை செயல்பாட்டிற்கான காற்று மற்றும் நீர் உரிமத்தை புதுப்பிப்பதற்காக நாகை மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

    இந்த உரிமத்தை புதுப்பிக்க ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருமாறு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தனராஜ் கேட்டுள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத அரிசி ஆலை உரிமையாளர் துரைசாமி இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார்.

    இதனையடுத்து லஞ்ச ஓழிப்பு போலீசார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் தனராஜை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். அதன்படி ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை துரைசாமியிடம் கொடுத்து அதை பொறியாளர் தன்ராஜிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர். போலீசாரின் அறிவுரையை ஏற்று செயல்பட முடிவு செய்த துரைசாமி தான் ரூ.40 ஆயிரம் லஞ்சம் தருவதாக பொறியாளர் தன்ராஜிடம் கூறியுள்ளார்.

    இதனையடுத்து லஞ்ச பணத்தை வாங்க பொறியாளர் தனராஜ் திருவாரூர் வந்தார். அப்போது ரசாயனம் தடவிய ரூ.40 ஆயிரத்தை அரிசி ஆலை உரிமையாளர் துரைசாமி, பொறியாளர் தனராஜிடம் கொடுத்தார். அப்போது அந்த பகுதியில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், லஞ்ச பணத்துடன் பொறியாளர் தனராஜை கையும், களவுமாக மடக்கி பிடித்தனர். இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×