search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நவீன விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    நவீன விளக்குகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிக்னலை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    நாகர்கோவில் நகரில் நவீன விளக்குகளுடன் ‘சிக்னல்’

    நாகர்கோவில் நகரில் நவீன விளக்குகளுடன் கூடிய ‘சிக்னலை’ போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தொடங்கி வைத்தார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கே.பி.ரோட்டில் கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைத்து, போலீசாரால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2017-ம் ஆண்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடந்தபோது இந்த சிக்னல் அகற்றப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் சைகைகள் மூலம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்தார்கள். இதற்கிடையே குமரி மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக பதவியேற்ற பத்ரி நாராயணன், கலெக்டர் அலுவலக சந்திப்பில் விரைவில் போக்குவரத்து சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி ஒரு மாத காலத்தில் கலெக்டர் அலுவலக சந்திப்பில் தனியார் நிறுவன பங்களிப்புடன் ரூ.5 லட்சம் செலவில் நவீன விளக்குகளுடன் கூடிய சிக்னல் அமைக்கப்பட்டது.

    அதன் தொடக்க விழா நேற்று காலை நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் புதிய சிக்னலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் சூப்பிரண்டு ஈஸ்வரன், துணை சூப்பிரண்டுகள் வேணுகோபால், கல்யாணகுமார், கணேசன், பீட்டர்பால், சாம்வேதமாணிக்கம், போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு இன்ஸ்பெக்டர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதிதாக தொடங்கப்பட்டுள்ள சிக்னலில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன. அதாவது சிக்னல் கம்பங்களிலும் சிக்னலுக்கு ஏற்றவாறு அதாவது பச்சை விளக்கு எரிந்தால் கம்பத்திலும் பச்சை விளக்கும், சிவப்பு விளக்கு எரிந்தால் கம்பத்திலும் சிவப்பு விளக்கும் எரியும் வகையில் நவீன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் தூரத்தில் இருந்து வரும்போதே சிக்னல் விளக்கு பச்சையில் உள்ளதா? சிவப்பில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சென்னை, தேனிக்கு அடுத்தபடியாக இந்த நவீன விளக்குடன் கூடிய சிக்னல் நாகர்கோவிலில் தான் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் சிக்னல் கம்பத்துடன் எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்ட பலகை அமைக்கப்பட்டு, அதில் விழிப்புணர்வு வாசககங்களும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. அதாவது கொரோனா பரவாமல் தடுப்பீர், முகக்கவசம் அணிவீர், தலைக்கவசம் அணிவீர் என்பன போன்ற வாசகங்கள் அதில் மாறி, மாறி ஒளிபரப்பு ஆகின்றன. மேலும் இந்த மின்கம்பத்தை ரிமோட் மூலம் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஆம்புலன்ஸ், வி.ஐ.பி.க்கள் வரும்போது மற்ற சாலைகளின் சிக்னல்களை நிறுத்தி விட்டு ஆம்புலன்ஸ் மற்றும் வி.ஐ.பி.க்கள் வாகனங்கள் செல்ல ரிமோட் மூலம் இயக்கும் வசதியும் இந்த சிக்னலில் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், இன்னும் ஒருவார காலத்தில் ரிமோட் மூலம் இந்த சிக்னல் இயக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    Next Story
    ×