search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பது எப்படி? வேளாண் இணை இயக்குனர் தகவல்

    விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து வேளாண் இணை இயக்குனர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.
    விழுப்புரம்:

    நிவர் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 178.23 மி.மீ. அளவுக்கு மழை பெய்தது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள 40,586 எக்டரில் மழைநீர் தேங்கியுள்ளது. அவ்வாறு மழைநீர் தேங்கிய வயல்களில் நீரை வடிப்பதற்கு விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    நீரை வெளியெற்றிய பின்னர் பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். அதாவது நெல் வயல்களில் தண்ணீர் தேங்கினால் துத்தநாகம் மற்றும் தழைச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் மஞ்சள் மற்றும் பழுப்பு நிறமாக மாற வாய்ப்புள்ளது. இதனை சரிசெய்ய வயல்களில் உள்ள தண்ணீரை வெளியேற்றி ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியா, 1 கிலோ துத்தநாக சல்பேட் உரத்தினை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் மூலம் இலைகளின் மீது தெளிக்க வேண்டும்.

    அதுமட்டுமின்றி ஏக்கருக்கு 50 கிலோ அம்மோனியம் சல்பேட், 22 கிலோ யூரியா, 15 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை 17 கிலோ பொட்டாஷ் உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும். 30 நாள் வரை உள்ள பயிர்களில் அதிக தூர் உள்ள நாற்றுக்களை பிரித்து இடைவெளி அதிகம் உள்ள இடங்களில் நட்டு நிரப்ப வேண்டும்.சூடோமோனாஸ், புளூரசன்ஸ் இடுவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம். இப்பணிகளை விவசாயிகள் விரைவாக மேற்கொண்டு மழைநீர் தேங்குவதால் ஏற்படும் மகசூல் குறைவினை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×