search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட கரும்பு தோட்டத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டபோது எடுத்த படம்.
    X
    நிவர் புயலினால் பாதிக்கப்பட்ட கரும்பு தோட்டத்தை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டபோது எடுத்த படம்.

    செஞ்சி பகுதியில் புயலால் சேதமான பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்

    மேல்மலையனூர், செஞ்சி பகுதியில் புயலால் சேதமான பயிர்களை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டார். அப்போது உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
    மேல்மலையனூர்:

    நிவர் புயல் காரணமாக பெய்த கனமழையால் மேல்மலையனூர் பகுதியில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல்வயல்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் புயல் காற்றில் கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்தது. இந்த நிலையில் சேதமடைந்த பயிர்களை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதில், சிறுதலைப் பூண்டி, மேல்மலையனூர் ஆகிய பகுதிகளில் மழைநீரில் மூழ்கிய நெல் வயல்கள், கப்ளாம்பாடியில் காற்றினால் சேதமடைந்த வாழைமரங்களையும், கோவில் புரையூரில் காற்றினால் சேதமடைந்த கரும்பு தோட்டங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த விவசாயிகள் கலெக்டரிடம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதேபோன்று செஞ்சி பகுதியான நல்லான்பிள்ளை பெற்றாள், புத்தகரம், நரசிங்கராயன்பேட்டை போன்ற கிராமங்களில் சேதம் ஏற்பட்டிருக்கும் நெல் பயிர்கள், கரும்பு, வாழை போன்ற பயிர்களை அவர் பார்வையிட்டார். முன்னதாக திருவண்ணாமலை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நந்தன் கால்வாய் தண்ணீர் வருவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பணையை அவர் பார்வையிட்டார்.

    ஆய்வின் போது வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) பெரியசாமி, தாசில்தார்கள் ராஜன், நெகருன்னிசா, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கனகராஜ், வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறவாழி, சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் சென்றிருந்தனர்.

    தொடர்ந்து அவலூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். அங்கு புயலுக்கு முன்பாக விவசாயிகள் எடுத்து வந்திருந்த நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த மூட்டைகளை பார்வையிட்ட கலெக்டர், அனைத்தும் பாதுகாப்புடன் உள்ளதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    இந்த நிலையில் அங்கிருந்த விவசாயிகள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து, ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் குறைந்த விலைக்கு தான் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்கிறார்கள் என்று தெரிவித்தனர். உடன், உங்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வரை மூட்டைகளை இங்கேயே இருப்பு வைத்து விற்பனை செய்யலாம் என்று தெரிவித்தார். இதை விவசாயிகளும் ஏற்றுக்கொண்டனர். அப்போது முன்னாள் எம்.பி.செஞ்சி சேவல் ஏழுமலை மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×