search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலக்கோட்டை நால் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்
    X
    நிலக்கோட்டை நால் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்

    நிலக்கோட்டை அருகே டிரைவர் உள்பட 2 பேருக்கு கத்திக்குத்து- பொதுமக்கள் சாலைமறியல்

    நிலக்கோட்டை அருகே டிரைவர் உள்பட 2 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே உள்ள அக்ரகாரபட்டியை சேர்ந்தவர் அர்ஜுன் குமார் (வயது 27). வேன் டிரைவர். இவரும் அதே ஊரை சேர்ந்த ரமேசும் மோட்டார்சைக்கிளில் நிலக்கோட்டையில் இருந்து அணைப்பட்டி சாலையில் நேற்று மதியம் துரைசாமிபுரம் அருகே சென்றுகொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு துரைசாமிபுரத்தை சேர்ந்த பாண்டி செல்வம் (26), சுப்பிரமணியன், அஜித், காமாட்சிபுரத்தை சேர்ந்த தமிழரசன் உள்பட 5 பேர் முன்விரோதம் காரணமாக கும்பலாக வந்து மோட்டார்சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் அர்ஜுன்குமாரையும், ரமேசையும் உருட்டுக்கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அர்ஜுன் குமார் மதுரை தனியார் மருத்துவமனையிலும், ரமேஷ் திண்டுக்கல் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாண்டிசெல்வம், தமிழரசன், சுப்பிரமணியன், அஜித் உள்பட 5 பேர் மீது நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே அர்ஜுன்குமாரையும், ரமேசையும் கத்தியால் குத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்ரகாரப்பட்டி கிராமமக்கள் ஆத்திரம் அடைந்து நேற்று இரவு 7 மணி அளவில் நிலக்கோட்டை நால் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    இந்நிலையில் அக்ரகாரபட்டியை சேர்ந்த சில இளைஞர்கள் 20-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிளுடன் துரைசாமிபுரத்துக்குள் நுழைந்து கூச்சல் போட்டனர். இதுகுறித்து துரைசாமிபுரம் கிராம மக்கள் உடனடியாக நிலக்கோட்டை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அக்ரகாரப்பட்டிக்கும், துரைசாமிபுரத்துக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை வந்து விடக்கூடாது என்பதற்காக இரு கிராமங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    Next Story
    ×