search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் மீட்புக்குழு
    X
    சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் மீட்புக்குழு

    விவசாயிகள் பேரணியில் கலகம், நிவர் புயலுக்கு 3 பேர் பலி, பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள்

    தமிழகத்தில் நிவர் புயலுக்கு 3 பேர் உயிரிழப்பு, விவசாயிகள் பேரணியில் கலகம், புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகளை பார்ப்போம்.

    # மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், புதிய தொழிலாளர் சட்டம் மற்றும் அரசின் பல்வேறு கொள்கைகளை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளதால், போக்குவரத்து மற்றும் வங்கிப் பணிகள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளன.

    # இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92.66 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 86.79 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 524 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. 4.52 லட்சம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 

    # வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி நோக்கி சென்ற விவசாயிகள் பேரணியில் கலகம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.

    # அமைதியான முறையில் பேரணி நடத்துவது என்பது அரசியல் சாசனம் தந்த உரிமையாகும் என்று டெல்லி முதல்  மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

    # வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி-மரக்காணம் இடையே கரை கடந்ததை அடுத்து, கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளை உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். புயல், மழை தொடர்பான விபத்துக்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

    # நிவர் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியின் வாயிலாக கேட்டறிந்தார்.

    # நிவர் புயலை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 28ந்தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    # புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனால் பயணிகள் யாரும் டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற ரெயில் நிலையம் வரவேண்டாம் எனவும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    # பெண்களுக்குக்கு சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க வகை செய்யும் மசோதா ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் சானிட்டரி நாப்கின்களை இலவசமாக வழங்க முடிவெடுத்த முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

    # சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே தேர்வு செய்யப்பட்டார்.

    # அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் மரடோனா காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், விளையாட்டு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தனது ஹீரோ மறைந்துவிட்டதாக  பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    # கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பது ஏன் என்பது குறித்து நடிகை தமன்னா சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். இருக்கிற வாய்ப்புகள் என்ன மாதிரி என்பது அவசியம் இல்லை, அதில் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம் என்கிறார் தமன்னா.
    Next Story
    ×