search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கு: விவசாயிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை

    சட்டவிரோதமாக நிலத்தை சுற்றி அமைத்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி பலியான வழக்கில், விவசாயிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோணசமுத்திரம் கிராமத்தில் சுப்ரமணி நாயுடு (வயது 65) என்ற விவசாயிக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்யாமல் தடுப்பதற்காக அவர் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். இந்த மின்வேலி அமைக்கப்பட்ட பகுதியை கடந்த 2015-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி (47) என்ற கூலித்தொழிலாளி கடந்து செல்லும் போது சிக்கி பலியானார்.

    இது குறித்து தகவலறிந்த பொதட்டூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பலியான கூலித்தொழிலாளியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் சுப்பிரமணி நாயுடு என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த வழக்கை திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வநாதன் விசாரித்து வந்தார். இந்த வழக்கில் அரசு வக்கீலாக ராம்குமார் ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், குற்றவாளி சுப்பிரமணி நாயுடுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
    Next Story
    ×