search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ பயிற்சி மையத்தில்  இளம் அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.
    X
    ராணுவ பயிற்சி மையத்தில் இளம் அதிகாரிகளின் அணிவகுப்பு நடைபெற்றபோது எடுத்த படம்.

    சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் 250 இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா

    சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் 250 இளம் அதிகாரிகளின் பயிற்சி நிறைவுவிழா நேற்று நடந்தது.
    சென்னை:

    சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில், இளம் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு மேற்கு பிராந்திய லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.பி.சிங் தலைமை தங்கினார்.

    இந்த பயிற்சி முகாமில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 181 ஆண் மற்றும் 49 பெண் அதிகாரிகள் மற்றும் பூடான் நாட்டைச் சேர்ந்த 8 அதிகாரிகள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 அதிகாரிகள், மாலத்தீவைச் சேர்ந்த இரு அதிகாரிகள் என மொத்தம் 250 அதிகாரிகள் தங்களது பயிற்சியை நிறைவு செய்தனர்.

    பயிற்சி நிறைவுபெறும் இளம் ராணுவ அதிகாரிகள் வீரநடை போட்டு அணிவகுத்து வந்தனர். லெப்டினென்ட் ஜெனரல் ஆர்.பி.சிங், இளம் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    பயிற்சியின்போது அனைத்து பிரிவுகளிலும் முதலிடமும், ஒட்டுமொத்த ‘மெரிட்’ அடிப்படையில் முதலிடமும் பிடித்த வருண் கணபதிக்கு கவுரவ வாள் மற்றும் தங்கப்பதக்கத்தை ஆர்.பி.சிங் வழங்கினார். மேலும் ஒட்டுமொத்த ‘மெரிட்’ அடிப்படையில் 2-வது இடம் பிடித்த மகதேவ் சிங் ரத்தோருக்கு வெள்ளிப்பதக்கமும், 3-வது இடம் பிடித்த பட்டில் திராஜுக்கு வெண்கலப்பதக்கமும் அளிக்கப்பட்டன.

    பின்னர், பயிற்சியை நிறைவு செய்த ராணுவ அதிகாரிகள், பணி அந்தஸ்தைக் குறிக்கும் நட்சத்திர பட்டயத்தை தமது சீருடையில் அணிந்துகொண்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கொரோனா காலம் என்பதால் பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினர் யாரும் இந்த நிறைவுவிழாவில் கலந்து கொள்ளவில்லை. விழா முழுவதும் ஆன்லைனில் ஒளிபரப்பப்பட்டது.
    Next Story
    ×