search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மதுரையில் குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    மதுரையில் குடிமை பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் 5 மணி நேரம் சோதனை நடத்தினார்கள். இதில் ரூ.26,500 பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரை:

    மதுரை கே.புதூரில் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் குடிமைப்பொருட்கள் கடத்தல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் மதுரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர் ரேஷன் பொருட்கள் கடத்தல்காரர்களிடம் லஞ்சம் பெறுவதாகவும், அரிசி மூட்டை கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாகவும் மாவட்ட லஞ்ச ஊழல் ஒழிப்பு கண்காணிப்புத்துறை அலுவலகத்துக்கு ரகசிய புகார்கள் வந்தன.

    இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையில் 10 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு கே.புதூர் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அதிரடியாக புகுந்தனர். இதையடுத்து அலுவலகத்தின் கதவுகள் இழுத்து மூடப்பட்டன.

    அதன்பிறகு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது.

    இந்த சோதனையில் அங்கு ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் பெரும்பாலான தொகைக்கு கணக்கு காட்டினார். இருந்த போதிலும் ரூ.26,500-க்கு கணக்கு காட்ட முடியவில்லை. எனவே அந்த பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதற்கிடையே குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் மற்றும் சரக்கு இருப்பு ஆகியவற்றை லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சரிபார்த்தனர்.

    சோதனையை முடித்துக் கொண்டு நள்ளிரவு 1 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் புறப்பட்டுச் சென்றனர். மதுரை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டிய அதிகாரிகளே கடத்தல்காரர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்று ஊழலுக்கு துணை போன சம்பவம், மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×